நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கும் . துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. தடையை ஏற்படுத்தாமல், இணக்கமாக ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (புதன்கிழமை) அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம்.

அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கம் மற்றும் மத்திய அரசின் பிரநிதியான துணைநிலை ஆளுநர் ஆகிய இருதரப்புக்கும் இடையே நடக்கும் அதிகார மோதலைத் தொடர்ந்து டெல்லி யாருக்கு சொந்தம் என இன்று உச்ச நீதிமன்றம் (புதன்கிழமை) தீர்ப்பளித்துள்ளது .

தேசிய தலைநகரின் நிர்வாகம் மற்றும் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தம் என்று கேட்டு ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது . இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி சந்திராச்சத் மற்றும் நீதிபதி அஷோக் பூஷன் ஆகியோர் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சியின் அடிப்படையில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கென்று முறையே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், டெல்லி ஒரு மாநிலம் அல்ல என்பதையும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பில் ‘நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கும் . துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. தடையை ஏற்படுத்தாமல், இணக்கமாக ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. அமைச்சரவையுடன் துணை நிலை ஆளுநர் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு துணைநிலை ஆளுநர் முடிவு எடுக்க முடியாது. மக்கள் நலத்திட்டங்கள் தமாதமானால் அரசும், ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகாரங்கள் கிடையாது. அரசியல் சாசனத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

ஆளுநர் அனைத்து கருத்துக்களையும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டியதில்லை. அமைச்சரவை மீது இருவேறு கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசி தீர்வு காணலாம். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது.

டெல்லியின் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநர் இருந்தாலும் கூட இடையூறு செய்பவராக அவர் இருக்கமுடியாது என்று நீதிபதி சந்திராச்சத் தனது தீர்ப்பில் கூறினார். ஜனநாயக அரசாங்கத்தில் உண்மையான அதிகாரமும் நிலையான பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கே உள்ளது என்றார் அவர். சட்டப்பிரிவு 239AA(4) படி, எல்லா விவகாரங்களுக்கும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவை என்று குறிப்பிடப்படவில்லை எனவும், அப்படி இருந்தால் டெல்லி அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும் எனவும் நீதிபதி சந்திராச்சத் கூறினார். நிலையான முடிவுகளை அமைச்சரவை தான்
எடுக்கவேண்டும் என்பதை துணைநிலை ஆளுநர் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

காலத்தின் தேவை கருதி அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகள் விளக்கப்படவேண்டும் என்றார் நீதிபதி பூஷன். அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்களில் மட்டுமே துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் பயன்டுத்தப்படவேண்டும் என சட்டப்பிரிவு 239AA வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கார், சந்திராச்சத் மற்றும் அஷோக் பூஷன் ஆகிய ஐந்து பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இவ்விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக தொகுத்து டிசம்பர் 2017இல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். ஆளுநர் அலுவலகத்தை பயன்படுத்தி அரசாங்க செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், தினசரி அலுவல்களில் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடாது எனவும் அக்கட்சி கூறியது.

அரசியலமைப்பு டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கே சாதகமாக உள்ளது எனவும், அதற்காக முடிவுகளை எடுப்பதில் அவர் காலம் தாழ்த்தக்கூடாது எனவும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் கூறியது. அரசாங்கத்துடன் கருத்துவேறுபாடு இருப்பின் அதனை குடியரசு தலைவரிடம் தெரிவிக்கவேண்டும் எனவும் கூறியது.

ஆகஸ்டு 2016இல், துணைநிலை ஆளுநருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், அரசியலமைப்பின் படி டெல்லியின் நிர்வாகத் தலைவரான துணைநிலை ஆளுநருக்கே அதிகமான அதிகாரங்கள் இருப்பதாகக் கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஜூன் (2018) மாதம், துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் ஒன்பது நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஒருதலைபட்சமாக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் டெல்லி அரசாங்கத்தை செயல்படாமல் தடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

குறிப்பாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் சரியாக பணிக்கு வருவதில்லை எனவும், தங்கள் விருப்பம்போல செயல்படுவதாகவும், இதனை துணைநிலை ஆளுநர் தலையிட்டு திருத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார் கெஜ்ரிவால்.

பாஜகவிற்கு எதிரான கட்சிகள் இந்நடவடிக்கையை கடுமையாக கண்டித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டின.

பல நேரங்களில் மாநில கட்சிகள், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட, மாநிலங்களின் அடிப்படை உரிமைகள் அவமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுவது வழக்கம். நரேந்திர மோடி கடுமையாக பிரச்சாரம் செய்தும் 2015 டெல்லி சட்டமன்ற
தேர்தலில் மூன்று தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றிபெற்றதை, பிரதமரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார் கெஜ்ரிவால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here