மத்திய அரசின் நவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் குறையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

கடந்த நவ.8ஆம் தேதி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. இதில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் அவை மீண்டும் கூடியது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனையடுத்து, பிரதமர் மோடி விவாதத்தில் பங்குபெறவுள்ளதால், எதிர்க்கட்சியினர் விவாதத்தைத் தொடங்கலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மத்திய பாஜக அரசைக் கண்டித்து நவ.28இல் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தால் ஏற்படும் விளைவுகளை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். அமைப்பு சாரா தொழில்கள், கூட்டுறவு அமைப்புகள், சிறு வணிகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் குறையும் என்றும் எச்சரித்தார். ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அளித்துள்ள 50 நாட்கள் அவகாசம் என்பது மிகவும் குறைவானது என்றார். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பானது நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது என குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்