நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் மீண்டும் மீண்டும் பொய் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தொழிலதிபர் அனில் அம்பானியின் நலனுக்காக அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை பலவீனப்படுத்தி, அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை ஊதியம் கொடுக்கக்கூட பணம் இல்லாமல் செய்து, பலவீனப்படுத்தி, அங்கு பணியாற்றும் சிறந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற அரசு முயற்சிக்கிறது.

எச்ஏஎல் நிறுவனம் ஊதியம் கொடுக்க பணம் இல்லாமல் தவிப்பது வியப்பல்ல. அனில் அம்பானியிடம் ரஃபேல் இருக்கிறது. ஊதியம் இல்லாதபோது, வேறு வழியின்றி எச்ஏஎல் நிறுவன ஊழியர்கள் நிர்பந்தத்துடன் அனில்அம்பானி நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் மீண்டும் மீண்டும் பொய் பேசி வருகிறார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் எதிர்பார்த்து காத்திருக்கும் தொகை ரூபாய் 26 ஆயிரத்து 570 கோடி தான் . மீதியிருக்கும் ரூபாய் 73 ஆயிரம் கோடி என்பது பொய், முட்டாள்தனமானது. ரூ 73 ஆயிரம் கோடிக்கான ஆர்டர் என்பது பொய்.

”தொழிலதிபர் அனில் அம்பானியின் நலனுக்காக அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தி அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரத்து 700 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வைத்துள்ளது. அதை இன்னும் மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை.

ஆனால், ரஃபேல் விமானம் கொள்முதலுக்காக ரூ.20 ஆயிரம் கோடியை டஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு அரசு கொடுத்துள்ளது. ஆனால், இன்னும் ஒரு ரஃபேல் போர் விமானம் கூட இந்தியாவுக்கு வரவில்லை.

மத்திய அரசின் நோக்கம் என்பது, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை பலவீனப்படுத்த வேண்டும், அதற்கு பணம் ஏதும் கொடுக்கக்கூடாது, அனில் அம்பானிக்கு பரிசளிக்க வேண்டும். ஆனால், மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை , மோடியின் நண்பர் அனில் அம்பானி எடுத்துக்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க எனக்கு 15 நிமிடங்கள் கொடுங்கள். இந்த நாடு உண்மையை அறிந்து கொள்ளும். ரஃபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைக் கொடுத்துள்ளார் என்று கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளது .

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் கடந்த வாரம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நீண்ட வாதம் நடந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட அளவுக்குக் கூட ஒப்பந்தம் வரவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது .

1

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பொய் கூறினால், அந்த ஒரு பொய்யை மறைக்க, காப்பாற்றப் பல பொய்களைக் கூற வேண்டியது இருக்கும். பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தத்தில் செய்த தவறை மறைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொய் கூறினார். நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியையும் இணைத்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்

எச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்) நிறுவனத்துக்கு அரசு வழங்கிய ரூ.1 லட்சம் கோடி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நாட்டை திசை திருப்பும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்பாரா என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு உடனடியாக ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். எச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய ஆதாரங்களையும் வெளியிட்டார். நிர்மலா சீதாராமன் தனது பதிவில், ‘‘2014-ஆம் ஆண்டுக்கும் 2018-ஆம் ஆண்டுக்கும் இடையே எச்ஏஎல் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நாட்டை ராகுல் காந்தி திசை திருப்புவது வெட்கக்கேடானது. இதற்காக, நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?’’ என்று பதிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here