பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டது ஏன் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நிர்மலா தேவியைப் போலீசார் நேற்று (ஏப்.16) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஏப்.17) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முறையாக நடைபெற, சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விசாரணை நடத்த குழு அமைத்திருப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்