நிர்மலாதேவி விவகாரத்தில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது சிறையிலடைத்தனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இதனையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ”ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக்குழு மூலம் நியாயம் நிச்சயமாக கிடைக்காது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களே விசாரணைக்கு உத்திரவிடுவது வேடிக்கையானது. எனவே, உண்மையான விசாரணை நடந்து, நியாயம் கிடைக்க வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.” என்றார்.

stalin

மேலும் அவர், ”பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் எந்தளவுக்கு தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள்? இதுகுறித்து எல்லாம் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், சிபிசிஐடி விசாரணையை அரசு அறிவித்துள்ளது. அறிவித்த இரண்டு நாட்களுக்குள், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை அவசர அவசரமான மாற்றியிருக்கின்றனர். எங்களுக்கு வந்திருக்கும் செய்திகளின்படி, அவர் மிகுந்த நேர்மையானவர், உண்மையை கண்டறிந்து வெளிப்படுத்தக்கூடிய திறமையான போலீஸ் அதிகாரி, என்று அறிகிறோம். எனவே, உண்மைகள் வெளியாகிவிடுமே என்ற அச்சத்திலும், சம்பந்தப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியிலும் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் சட்டம் – ஒழுங்கு பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் ஏன் கவலைப்படுகிறார்கள்?” என்றார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்