பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நிர்மலா தேவியைப் போலீசார் நேற்று (ஏப்.16) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஏப்.17) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் திரு.இராமசாமி அவர்கள் 16.04.2018 அன்று அக்கல்லூரியின் கணிதத்துறை துணை பேராசிரியர் டாக்டர்.நிர்மலாதேவி என்பவர் அக்கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளின் கைப்பேசியில் தொடர்புகொண்டு மாணவிகளை தவறான நோக்கத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தூண்டியதாகவும், குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய குற்ற எண். 170/2018 u/s 370 r/w 511 IPC and 67 of Information Technology Act ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது, இவ்வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் மேற்படி வழக்கினை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து மேல் விசாரணைக்காக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (CBCID)க்கு மாற்றி 17.04.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here