பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நிர்மலா தேவியைப் போலீசார் நேற்று (ஏப்.16) கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று (ஏப்.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிர்மலா தேவி என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும், அவர் முகத்தைக்கூட தான் பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சிபிஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும் என்றும், அதனால் தற்போது அதற்கான தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.

துணைவேந்தர் நியமனம் குறித்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்