பல ஆயிரம் கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது

 பல ஆயிரம் கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள சொகுசு அபார்ட்மென்ட், நகைகள் உள்ளிடவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும்.
பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. 
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டனர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் பலரது பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கிவிட்டது. தொடர்ந்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், நிரவ் மோடிக்குச் சொந்தமான 36 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை. அதைத் தொடர்ந்து தற்போது வெளிநாடுகளில் அவருக்கு இருக்கும் சொத்துகளையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இதுவரை இந்தியாவில் பணமோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது, ஒரு சில சமயம் மட்டுமே நடந்துள்ளது. அதில் நிரவ் மோடி வழக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் பல அசையா சொத்துகள், சொகுசு அபார்ட்மென்ட், நகைகள், வங்கிக் கணக்கில் வைத்திருந்த தொகை ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here