‘நியாயம் கிடைக்காதும்மா’ : கோகுல்ராஜ் தாய் கண்ணீர்

0
752

திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை, தகப்பனை இழந்த அந்த வீட்டிற்குப் பேரிடியாய் விழுந்தது. அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் பணியாற்றி இறந்துபோன கணவரின் பென்ஷனை வைத்து தன் இரண்டு மகன்களையும் பொறியியல் படிக்க வைத்தார், அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்ற சித்ரா. மூத்த மகன் கலைச்செல்வன் பொறியியலில் பட்ட மேற்படிப்பையும் கோகுல்ராஜ் பட்டப்படிப்பையும் படித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் சாதிய கண் அந்தக் குடும்பத்தின் மேல் பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அதன் மூலம் ஆதாயங்களை அடையப் பார்க்கும் ஒரு சிலர், தந்தையில்லாத, கேடபாரற்ற இந்தக் குடும்பத்தின் கோகுல்ராஜை தனக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். சந்தர்ப்பம் பார்த்து சதித் திட்டங்களை அரங்கேற்றினர்.

“அவனுக்கு இப்படியொரு சாவு வரும்னு நாங்க எதிர்ப்பார்க்கலை. காலேஜுக்குப் போனவன், இப்படி பொணமா திரும்பி வந்தான். எங்களுக்கு எந்தப் பகையும் கிடையாது. சுயநலத்துக்காக அநியாயமா எம் புள்ளைய கொன்னுட்டாங்க. அந்தம்மா விசாரிக்கும்போது நியாயம் கிடைக்கும்னு தைரியம் சொல்லிச்சு. அவங்களும் இப்படி செத்துப் போயிட்டாங்க. சிபிசிஐடி விசாரிச்சா உண்மை வெளிவரும்னு நம்பினோம். ஆனா இப்ப நடக்கறதைப் பார்த்தா…நியாயம் கிடைக்காதும்மா” என்று குரல் உடைந்து அழுகிறார் கோகுல்ராஜின் தாய் சித்ரா.

கோகுல்ராஜ் வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்படும் யுவராஜின் பேட்டியை சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பியது புதிய தலைமுறை தொலைக்காட்சி. கோகுல்ராஜ் கொலையில் யுவராஜுக்கு முக்கிய பங்கு இருப்பதை சாட்சியங்கள் சொன்ன நிலையில், அவரை ஹீரோவாகக் காட்டியதால் இந்த வழக்கின் திசையே மாறிப்போகக் கூடும் என்கிற அச்சம் கோகுல்ராஜ் குடும்பத்துக்கு வந்திருக்கிறது.

“தம்பியைக் கொன்னது முழுக்க முழுக்க பப்ளிசிட்டி தேடிக்கத்தான். எங்களுக்கும் சரி அவனுக்கும் சரி விரோதிங்கன்னு யாரும் கிடையாது. அவங்க கம்யூனிடி காரங்ககிட்ட நான்தான் இந்த கம்யூனிடியைக் காப்பாத்தறேன்னு பேர் எடுக்கணும். அதன் மூலமா பணமும் அரசியல் அதிகாரத்தையும் சம்பாதிக்கணுங்கிறதுதான் தம்பி கொலைக்குக் காரணம். இப்ப வரைக்கும் அவங்க அதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் தப்பிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கும். எங்களுக்கு ஒன்னும் இல்லை. அவங்க அடிச்சா, நாங்க வாங்கித்தானே ஆகணும்” விரக்தியுடன் பேசினார் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன். சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்த அவர்,

நீதி தேடி கோகுல்ராஜின் தாய் சித்ராவும் அண்ணன் கலைச்செல்வனும் நடுவில் இருப்பவர்கள்...
நீதி தேடி கோகுல்ராஜின் தாய் சித்ராவும் அண்ணன் கலைச்செல்வனும் (நடுவில் இருப்பவர்கள்)

“இவங்க உண்மையை வெளியே கொண்டுவரமாட்டாங்கன்னு தெரிஞ்சுப்போச்சு. மீடியாவே குற்றவாளியை ஹீரோ மாதிரி காமிக்குது. குற்றம் செஞ்ச சாதாரண மனுஷன், இப்படி மீசை முறுக்கிக்கிட்டு பேச முடியுமா? அதிகாரத்தோட துணையில்லாம இதெல்லாம் முடியாது. போலீஸ் நினைச்சா பிடிச்சிருக்கலாம். ஆனா பிடிப்பாங்கங்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களுக்கு உண்மை தெரியாம இல்ல. சட்டப்படி நியாயம் கிடைக்கனும்னுதான் போராடுறோம்” என்ற கலைச்செல்வன் சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார்.

கோகுல்ராஜ் கொலையை தற்கொலை என திரித்து சொல்லப்படுவது குறித்து, இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே கோகுல்ராஜ் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்துவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர செயலாளர் செள. பாவேந்தனிடம் இப்போது.காம் பேசியது…

“கோகுல்ராஜ் கொலையை, தற்கொலை என்று சொல்வது அயோக்கியத்தனம். ரயில் தண்டவாளங்களுக்கு இணையாக, கோகுல்ராஜ் உடல் கிடக்கிறது. தலை 12 அடி தள்ளி கிடக்கிறது. ரயிலில் அடிப்பட்டிருந்தால் கழுத்தில் நான்கு இன்ச் சதையாவது நசுங்கியிருக்கும். தலையை எடுத்து கழுத்துப் பகுதியில் ஒட்டமுடிகிறது. கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு வெட்டியிருப்பது நன்றாகத் தெரிகிறது. இதைப் பார்த்த பாமரனும் கொலை என்றுதான் சொல்வார்.

ஆனால், திருச்செங்கோடு எஸ்பி இதைக் கொலை வழக்காகவே பதிவு செய்யவில்லை. ஆதித் தமிழர் பேரவை, பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுப் போராட்டத்தை நடத்திய பிறகுதான் மர்ம மரணம் என்று வழக்கைப் பதிவு செய்தார்கள்” என்று நடந்தவற்றைக் கூறினார் பாவேந்தன்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ், கோகுல்ராஜை ஆள்வைத்து கோயிலுக்கு அழைத்துச் சென்றதும் கோகுல்ராஜின் செல்போனை யுவராஜ் வைத்திருந்ததும் ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில் தனக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லாதவர் போன்றே யுவராஜ் தன்னைக் காட்ட முயற்சிக்கிறார் என்கிறார் பாவேந்தன்.

நிராயுதபாணிகளாக நிற்கும் கோகுல்ராஜ் குடும்பத்துக்கு நீதி எப்படி, எப்போது கிடைக்கும் என்பதே நமக்குள் எஞ்சியிருக்கும் கேள்வி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்