நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, தனிக்குழுவை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஷரதா நிதி நிறுவனம் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், சிபிஐயின் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்று கோரி அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தோர் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ஷரதா நிதி நிறுவனம் தொடர்பாக சிபிஐ நடத்தி வரும் விசாரணையைக் கண்காணிக்க, தனிக்குழுவை அமைக்க நாங்கள் விரும்பவில்லை என்றனர்.

நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்தார். ஆனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியது.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ பலமுறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால், சிபிஐயின் ஆணையை அவர் தொடர்ந்து நிராகரித்து வந்ததையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி முயற்சித்தனர். ஆனால், மேற்கு வங்க காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும், மேற்கு வங்க அரசு அவருக்கு உதவி வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராஜீவ் குமாருக்குக் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9,10-ஆம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்