நிதிநிறுவன மோசடி ;பாஜகவில் இணைந்த முக்கிய குற்றவாளிகள் ; விசாரணையை கிடப்பில் போட்ட சிபிஐ

0
363

நிதிநிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிராக விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் சிபிஐ முன்னாள் ரயில்வே அமைச்சரும், முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த முகுல் ராய் மீதான விசாரணையை நடத்தவேயில்லை. முகுல் ராய் மீதான விசாரணை 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதுபோல்தான் அஸ்ஸாம் அமைச்சர் ஹிமன்டா பிஸ்வா ஷர்மா மீதான விசாரணையும் கிடப்பில் போடப்பட்டது.

பணம் கொடுக்கல் வாங்கலில் ஹிமன்டா பிஸ்வா ஷர்மா மோசடியில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ அவரை விசாரணைக்கு அழைத்தது. அவருடைய வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது ஆனால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

முகுல் ராயும், ஹிமன்டா பிஸ்வா ஷர்மாவும் சிபிஐ விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது பாஜகவில் இணைந்தனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி 2014 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை துவங்கியது. ஜனவரி 30, 2015 ஆம் ஆண்டு முகுல் ராயை சிபிஐ விசாரித்தது . ஷரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென்னுக்கும் முகுல் ராய்க்கும் உள்ள தொடர்பு குறித்து சிபிஐ அவரை விசாரித்தது. சுதிப்தா சென் கொல்கத்தாவிலிருந்து தப்பியோட முகுல்ராய் எவ்வாறு உதவினார் என்று சுதிப்தா சென்னின் ஓட்டுனர் கொடுத்த வாக்குமூலம் சிபிஐ வசம் இருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ் கொடுத்த தகவலின்படி 2015 ஆம் ஆண்டு முகுல்ராய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. குணால் கோஷ் 2013 இல் ஏமாற்றியதற்காகவும், நம்பிக்கை துரோகம், மற்றும் குற்றவியல் சதி ஆகியவற்றில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டார். ஷரதா நிதி நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் போனதற்கு காரணம் குணால் கோஷ் என்று சரதா நிறுவனத்தின் சார்ப்பில் வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். கைதான சில மணி நேரங்களில் ஷரதா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட முகுல் ராய் உட்பட 12 பேரின் பெயர்களை விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முகுல் ராய் நவம்பர் 3, 2017 அன்று பாஜகவில் இணைந்தார். நவம்பர் 26, 2014 ஆம் ஆண்டு ஹிமன்டா பிஸ்வா ஷர்மாவை சிபிஐ விசாரித்தது . விசாரணைக்கு 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டையும், அவரது மனைவி கவுகாத்தியில் நடத்தி வரும் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தையும் சிபிஐ சோதனையிட்டது.

ஷரதா நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சுதிப்தா சென்னிடமிருந்து மாதந்தோறும் ரூ20 லட்சத்தை பெற்றுக் கொண்டிருந்தார் என்பதுதான் ஹிமன்டா பிஸ்வா ஷர்மா மீதிருக்கும் குற்றச்சாட்டு. ஷரதா நிதி நிறுவனத்தை மிரட்டி பணம் பெற்றதாக ஷரதா நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கூறி இருந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அஸ்ஸாமில் அவர் பல தொழில்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அஸ்ஸாமில் இருக்கும் அரசியல்வாதிகள் , அதிகாரத்தில் இருப்பவர்கள், மீடியா அதிபர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கொல்கத்தாவிலிருந்து தப்பியோட தனக்கு உதவியதாக சுதிப்தா சென் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர்களையும் சிபிஐயிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் ஹிமன்டா பிஸ்வா ஷர்மாவின் பெயரை குறிப்பிடவில்லை. ஹிமன்டா பிஸ்வா ஷர்மா ஆகஸ்ட் 28, 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பொன்சி நிதி மோசடியிலும் அவரை சிபிஐ எந்த விசாரணைக்கும் அழைக்கவில்லை.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முகுல் ராயை தொடர்பு கொண்டு பேசிய போது நான் பாஜகவில் 2017 ஆம் ஆண்டு இணைந்தேன் , என்னை சிபிஐ விசாரித்தது 2015 ஆம் ஆண்டு. அப்புறம் எப்படி நான் பாஜகவிடமிருந்து சிபாரிசு பெற்றேன் என்று கூற முடியும் என்று கேட்டுள்ளார். ஹிமன்டா பிஸ்வா ஷர்மாவுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அனுப்பிய எந்த கேள்விக்கும் பதில் கூறவில்லை. இது குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்கள் .

ஜனவரி 29, 2016 ஆம் ஆண்டு கொல்கத்தா கமிஷனராக ராஜீவ் குமார் பதவியேற்ற பிறகு , அக்டோபர் 18, 2017 ஆம் ஆண்டு சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது . அதன்பிறகு தொடர்ந்து 4 முறை அவருக்கு சம்மன் அனுப்பியது. கடைசியாக டிசம்பர் 8, 2018 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது

முதல் சம்மனுக்கு பிறகு அப்போதைய சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு அக்டோபர் 27, 2017 அன்று எழுதிய கடிதத்த்தில் சிபிஐ அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. குற்றவியல் சட்டத்தின்கீழ் போலீஸ் கமிஷனருக்கு சம்மன் அனுப்புவதை நீங்கள் பாராட்ட வேண்டும். அதுவும் அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியை என்ன நடந்தது என்றெல்ல்லாம் கேட்காமல் அவருக்கு சம்மன் அனுப்புவது என்பது பண்டோரா பெட்டியை திறப்பதற்கு சமம் என்று அந்த கடிதத்தில் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் , 2013 ஆம் ஆண்டு ஷரதா நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு, சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக ராஜீவ் குமாரை நியமித்தது. அந்த சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர்கள், எம்பிக்கள் , அமைச்சர்கள் , அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

ஆகஸ்ட் 18, 2018 , சிபிஐ மேற்கு வங்க டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 2 நாட்களுக்கு பிறகு மேற்கு வங்க டிஜிபிக்காக மேற்கு வங்க டிஐஜி சிபிஐ க்கு எழுதிய கடிதத்தில் மாநில சிறப்பு விசாரணைக் குழு, நிதி நிறுவன வழக்கை விசாரித்தவர்கள், மற்றும் சிபிஐ அதிகாரிகள் சந்திக்க நேரம், இடம் , தேதி- யை கூறும் படி கேட்டது .

ஆனால் சிபிஐ அதிகாரிகள் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றது .

மேற்கு வங்க அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு ஆவணங்கள், சாட்சிகளை அழித்துவிட்டது என்று சிபிஐ தரப்பில் குற்றசாட்டு வைக்கப்பட்டது. அந்த ஆவணங்களும் , சாட்சிகளும் இந்த மோசடி வழக்கில் முக்கியமானவையாக கருதப்பட்டது என்றும் சிபிஐ கூறியது அதனால் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க வேண்டும் என்றது.

சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த அதிகாரிகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த விஷயத்தில் சிபிஐ உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்று மனுதாக்கல் செய்தது. டிசம்பர் 8, 2018 அன்று சிபிஐ டிசம்பர் 18, 2018 க்குள் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு சம்மன் அனுப்பியது . இதற்கு பதில் எழுதிய மேற்கு வங்க டிஜிபி முதலில் உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள் பிறகு ராஜீவ் குமாரை சந்திப்பது கூரித்து முடிவெடுக்கலாம் என்று கூறினார்.

இதத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சிபிஐ வருகை தந்தது. சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் திரிணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான , குணால் கோஷ், மதன் மித்ரா, ஶ்ரீஜாய் போஸ் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Courtesy : TheIndian Express