தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜன. 1) முதல் காலவரையின்றி கடைகளை மூடப் போவதாக பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை, கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 1) பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.


 இதுகுறித்து மாவட்டங்கள் வாரியாக விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடைகளில் வைக்கப்பட்டுள்ள தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 
இதுதொடர்பாக தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன் செய்தியாளர்களிடம் கூறியது: தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின்போது, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.


 தமிழக அரசின் உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாநிலம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக் கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் (ஜன.1) காலவரையின்றி மூடப்படும். இந்த நிலைமை தொடர்ந்தால் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியையும் நிறுத்துவதென முடிவு செய்துள்ளோம் என்றார்.
 

courtesy: DN
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here