நாற்று நட்ட வயலுக்குள் பொக்லைன் எந்திரத்தை இறக்கிய கெய்ல்; தடுத்ததாக கூறி ஒருவர் கைது

0
165

செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்ததாக, நிலம், நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . 

கெய்ல் நிறுவனம் விவசாயத்தை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்வதாக மயிலாடுதுறை பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்‌ளனர்.

நாகை மாவட்டத்தில் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதித்து எரிவாயு எடுத்துச் செல்ல கெய்ல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, முடுகண்டநல்லூர் கிராமத்தில், குறுவை நடவு செய்த வயலில் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அறிந்த விவசாயிகள், விவசாய நிலத்தில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு போராட்டம்‌ ‌நடத்தினர். இதனால் அங்கு பள்ளம் தோண்டாமல் பொக்லைன் இயந்திரத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.இந்நிலையில் கெய்ல் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியவர்களுடன் விவசாயிகள் முறையிடும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ”நாற்று நட்ட வயல் பச்சபுள்ள மாதிரி சார்” என்று விவசாயி கூறுவது காண்போரை கண் கலங்கச் செய்கிறது. 

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் திட்டம் என்ற பெயரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை நரிமனத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சீர்காழியை அடுத்த மாதானத்தில் இருந்து தரங்கம்பாடி அருகிலுள்ள மேமாத்தூர் வரையிலான 29 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்ப் பாதை அமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி – கெயில் நிறுவனங்கள் திடீரென இறங்கியுள்ளன. குழாய்ப் பாதை முழுக்க முழுக்க விளை நிலங்களில் அமைக்கப்படுகிறது. அந்த விளைநிலங்களில் அண்மையில் தான் குறுவை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை அழித்து விட்டு குழாய்ப்பாதையை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடவு நட்ட பயிர்களை அழிக்க வேண்டாம் என்று உழவர்கள் கெஞ்சினாலும், போராடினாலும் கூட, அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இராட்சத எந்திரங்களின் மூலம் பணிகளை தொடர்கின்றன. இதைக் கண்டித்து குழாய்ப்பாதை அமைக்கப்பட உள்ள 29 கி.மீ நெடுகிலும் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உழவர்கள் தங்களின் வயல்களை மிகவும் புனிதமாக கருதுபவர்கள். குறுவை பருவ நெற்பயிரை நடவு நட்டு விட்டால் அவற்றை தங்களின் குழந்தைகளைப் போல அதிக பாசத்துடன் பராமரிப்பார்கள். அந்த பயிர்கள் தான் நாளைய நமது உணவை சுமந்து நிற்கும் கடவுளின் கருணைக் கருவிகளாகும். ஆனால், இத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஓ.என்.ஜி.சி & கெயில் நிறுவனங்களின் அதிகாரிகள் எந்திரமாக மாறி, உண்மையான எந்திரங்களின் உதவியுடன் பயிர்களை அழிப்பது மன்னிக்க முடியாததாகும். சில இடங்களில் உழவர்களின் கடுமையான போராட்டத்தினால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, மற்ற இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

மாதானம் பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்ட போது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதலாக கிணறுகள் தோண்டப்படாது என்றும், கச்சா எண்ணெய் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு,  இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் கூடுதலாக 7 எண்ணெய்க் கிணறுகளை அமைத்தது. இப்போது அடுத்தக்கட்டமாக, இரண்டாவது வாக்குறுதியையும் மீறி, பயிரிடப்பட்ட நிலங்களை எண்ணெய் நிறுவனங்கள் துண்டாடுகின்றன.

ஏற்கனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கி.மீ பரப்பளவில் 6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என உழவை அழிக்கிறது  மத்திய அரசு. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here