நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது: நடிகர் சூர்யா

0
143

நடிகர் சூர்யா நடிக்க, சுதா கொங்குரா இயக்கத்தில் வெளிவரும் படம் சூரரைப் போற்று. கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். சூர்யாவுக்கு இது 38-வது படம்.

இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி.

கொரோனா ஊரடங்கின் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படம் அமெஸான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்திருந்தார். 

ஆனால், தற்போது அறிவித்தபடி இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரைப்படம் வெளியிட பெற வேண்டிய சில தடையில்லா சான்றைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் திரைப்படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில், “சூரரைப் போற்று படத்தைத் துவங்கும்போது, சில சவால் இருக்குமென நினைத்தோம். அதாவது, இதுவரை படம்பிடிக்கப்படாத பகுதிகளில் படத்தை எடுப்பதாலும் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களோடும் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களோடு பணியாற்றுவதாலும் ஏற்படும் சவால்கள் அவை.

இந்தப் படம் விமானப்படை பற்றியது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆகவே நாங்கள் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இந்திய விமானப் படையின் விமானங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது.

தற்போது புதிதாகச் சில தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டியுள்ளது. ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் தேசத்தின் முன்னுரிமை வெவ்வேறு விஷயங்களின் மீது குவிந்துள்ளதால் நாங்கள் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

சூரரைப் போற்று நம் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். துரதிருஷ்டவசமாக இந்த படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்திருக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதற்காக எவ்வளவு காத்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதனை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

விரைவிலேயே இந்தப் படத்தின் ட்ரைலரை வெளியிடுவோம்” என்று நடிகர் சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here