மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக இன்று கொல்கத்தாவில் பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி நடந்து வருகிறது. இந்தப் பேரணிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி யஷ்வந்த் சின்ஹா, “சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியமைத்த எந்த அரசும் வளர்ச்சித் திட்டங்களில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு போல விளையாடவில்லை” என்று கூறி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தொடர்ந்து, “நாம் இங்கு கூடியிருப்பது ஒரு மனிதரை அகற்ற அல்ல. இந்த அரசின் மொத்தக் கொள்கையையும் அகற்றுவதற்காகவே. மோடிஜி ஒரு பொருட்டே அல்ல. நாட்டில் இருக்கும் எந்த ஜனநாயக அமைப்பையும் இந்த அரசு விட்டுவைக்கவில்லை” என்று பேசினார்.

‘ஐக்கிய இந்தியப் பேரணி’ எனப்படும் இந்த பிரமாண்டப் பேரணியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஒருங்கிணைத்துள்ளது. கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் இந்தப் பேரணிக்கு எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பல லட்சம் பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்தந்ரீக் ஜனதா தளத்தின் சரத் யாதவ், தேசிய கான்ஃபரென்ஸ் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், இதற்கு ஆதரவாக அவர் மம்தா பானர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here