டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் , நீண்டநாள் கோரிக்கையான சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

அதேசமயம், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், செருப்புகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

2017 ஜுலை மாதம் 1-ஆம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி(ஜிஎஸ்டி) நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

தற்காலிக நிதி அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

*சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு வரிவிலக்கு அளிக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. அந்த நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

* புனித ஸ்தலங்களுக்காக செய்யப்படும் மார்பில், மரங்கள், கற்கள், எந்தவிதமான விலைஉயர்ந்த கற்கள் இல்லாமல் செய்யப்படும் ராக்கி கயிறு, வீடு கூட்டும் துடைப்பத்துக்கான மூலப்பொருட்கள், முக்கியமான நினைவு நாளில் ரிசர்வ் வங்கி வெளியிடும் காசுகள், இலையால் உருவாக்கப்படும் தட்டுகள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

*கைத்தறிகள், விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*லித்தியம் அயன் பேட்டரி, வாக்கூம் கிளீனர், உணவு கலக்கும் மிக்ஸர், கிரைண்டர், முகச்சவரம் செய்யும் சேவிங் மெஷின், ஹேர் கிளிப்பர், வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், வாட்டர் கூலர், ஐஸ் கிரீம் ப்ரீசர், டிரையர், அழகுசாதனப் பொருட்கள், பெர்பியூம்கள், சென்ட், பெயின்ட், வார்னிஷ் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*பெட்ரோலில் எத்தனால் கலக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனாலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*இறக்குமதி செய்யப்படும் யூரியாவுக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.

*இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* ரூ.500 முதல் விலையுடைய செருப்புகளுக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.1000 முதல் விலையுடைய செருப்புகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

*டிவிகளில் 68 செ.மீ வரை இருப்பவற்றுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகுறைப்பு அனைத்தும் இம்மாதம் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

*ஆகஸ்ட் 4-ஆம் தேதி அடுத்த ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டம் நடக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்