”நான் யார்?”

7
2256

எல்லா தன்னிலைகளும் முக்கியமானவை; எல்லா அடையாளங்களும் முக்கியமானவை; ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களுடைய கணங்களையும் முகங்களையும் கொண்டாட வேண்டும்; “நான் யார்?” என்கிற சதைகளையும் ரத்தத்தையும் மனசுகளையும் பிழிகிற, வதைக்கிற கேள்விகளில்தான் ஒவ்வொருவரும் தங்களைக் கண்டடைகிறார்கள். நண்பர் ராஜன் குறை, “நான் பிராமணன்; எனது சமூகம் காலம் காலமாக பிற சமூகங்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக அழுதுபுரள்கிறேன்” என்று சொன்னது இந்த இரவில் ஞாபகம் வருகிறது. தலித் என்கிற அடையாளத்தையும் முஸ்லிம் என்கிற அடையாளத்தையும் பறைசாற்றுவது இந்தத் தேசத்தில் எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில், “நான் ஆதிக்கச் சாதி; ஆணவக்கொலைக்கு எதிரானவள்” என்கிற பிரகடனமும். இந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது முற்போக்கின் பெயராலோ, தலித்தியத்தின் பெயராலோ எந்தத் தாக்குதல் வந்தாலும் அதனை உரையாடல்கள் மூலம் எதிர்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறேன்.

“கண்டனங்கள் கடுமையாக இருக்கின்றன” என்று நிர்மலா கொற்றவையும் சுமதி தங்கபாண்டியனும் குட்டி ரேவதியும் சொல்வதை முழு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதிக்கச் சாதிகளின் பெயரைச் சொல்லி உடுமலைப்பேட்டை ஷங்கரின் ஆணவக் கொலையை சமூக வலைத்தளங்களிலும் டீக்கடை பெஞ்சுகளிலும் நியாயப்படுத்தியவர்களுக்கான பதில்தான் “நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலையை எதிர்ப்பவள்” என்கிற பதிவு. இதற்கு முன்பு எழுதிய தலையங்கம் “அவசரம் வேண்டாம், சின்னசாமிகளே” சாதியற்ற தமிழ்நாட்டுக்கான எமது கனவுக்கான சாட்சியமாக இருக்கிறது.

ஊடகவியலின் அறம் பிறழாது இந்தக் கருத்துக்கள் பெறப்பட்டன; சுதந்திரமான செய்திகளுக்கும் சுதந்திரமான கருத்துக்களுக்குமான தைரியமான களமாக இருக்கும் நோக்கில்தான் இந்தச் செய்தித்தளம் உருவாக்கப்பட்டது; “நீ உயர் சாதி என்று சொல்லாதே” என்பதுவும் பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்தான்; இறுக்கம் தளர்ந்து மவுனம் உடைத்து உரையாடுவோம், தோழர்களே. ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவோம்; ஆதிக்கச் சாதியினர் எல்லோரும் ஆணவக் கொலைகள் செய்வதில்லை; ஒருபடித்தான ஊடகப் பிம்பங்களிலிருந்தும் அரசியல் மொழியிலிருந்தும் விடுதலையாவோம். தமிழ்நாடு என்றைக்கும் ஜனநாயகத்தின், புதிய உரையாடல்களின் ஊற்றுக்கண்ணாக இருக்கும்; அதற்குப் பலம் சேர்ப்பதாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான இப்போது டாட் காமின் உரையாடல் தொடரும்.

7 கருத்துகள்

 1. வார்த்தைகளிலும் , எழுத்துகளிலும் வெளிப்படுத்துகின்ற தைரியம் இங்கு சிலருக்கு செயலில் இருப்பதில்லை , மைக் கிடைக்கின்றதே என்று வீரமாக பேசிவிட்டு பின்பு பிரச்சினைகள் வந்ததும் நான் அப்படி சொல்லவில்லை பத்திரிகை காரர்கள் தப்பாக போட்டு விட்டார்கள் என்ற எத்தனை பேரை நாம் பார்த்து இருக்கிறோம் ..

 2. உங்கள் கருத்தோடு உடன்பட்டாலும் தமிழகம் ஒரு பக்கம் பிற்போக்காக நடந்தாலும் சிந்தனை தளத்தில் உங்கள் கருத்துக்களை விட மிக மிக மேலாக நடந்தே வந்திருக்கிறது. நான் தான் அது என்ன வெங்காய கவுரவக் கொலை… கொலை செய்பவனுக்கு என்ன கவுரவம் இருக்கிறது என்று கிஏள்வி எழுப்பியவன். உடனே அது ஆணவக் கொலை என்று மாற்றப்பட்டது. விபச்சாரிகள் இன்று பாலியல் தொழிலாளர்களாக மாற்றம்பெற்றார்கள். இப்படி முற்போக்கான சிந்தனை தளங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பயணித்த இந்த சிந்தனை மரபில் உயர் சாதி என்ற கருத்தியலை நான் வன்மையாக எதிர்த்தவன். தாழ்த்திய சாதி.. தாழ்த்தப்பட்ட சாதி என்று எழுதுங்கள் என்றும் பரப்புரை செய்திருக்கிறேன். மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் புரட்சி செய்வதாக தெரிந்தாலும் ஆழ்மன ரீதியாக பழைய படிமங்களை மீட்டெடுப்பதாகவே உணர்ந்தேன். இப்பொழுதும் கூட ஒரு பரபரப்பு ஆசையில் மீடியா இன்ஸ்டிங்க்ட்டில் இதை செய்திருப்பீர்கள் என்றே உணர்கிறேன். என் கருத்து மட்டுமே இது. தங்கள் முடிவுகளை நான் மறுபரீசிலனை செய்ய அழைக்கவில்லை. அடுத்து சாதிப்பெயரை சேர்க்கக்கூட சொல்லலாம். ஏன் தமிழகம் மட்டும் அதை செய்யாமல் மறைக்கிறது என்று ! காரணம் ராஜன்குறை போன்ற அதிதீவிர உங்கள் வழக்காடலில் சொல்வதென்றால்.. உயர்சாதி சிந்தனையாளர்களின் மீதான உங்கள் பெருமதிப்பாகக்கூட இருக்கலாம் !

  • நீங்கள் சொல்லித்தான் கவுரவக் கொலை என்பது ஆணவக் கொலை என்று மாற்றப்பட்டதாகச் சொல்வது வியப்பளிக்கிறது! ஆங்கில ஊடகங்கள் ஹானர் கில்லிங் என்று ஆரம்பத்தில் சொல்லி வந்ததற்கு அகில இந்திய அளவில் விமர்சனங்கள் வந்த்தைத் தொடர்ந்து டிஸ்ஆனர் கில்லிங் என்று மாற்றி அழைக்க ஆரம்பித்ததன் தொடர்ச்சியே தமிழில் ஏற்பட்ட மாற்றமும் என்பதே சரி.

 3. நீங்கள் சொல்ல வந்த செய்தி உயர் நோக்கோடுதான் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல வந்த விதம் வேறு கருத்தையல்லாவா சொல்லியது. நீங்கள் முன்வைத்த அனைத்து கருத்தியலாளர்களும் என்ன சாதி என்று யாரும் இதுவரை கேட்டதில்லை. காரணம் அவர்கள் அவர்களது கருத்துக்களாலேயே மதிக்கப்பட்டனர். இன்று அவர்கள் வெறுமே வந்து இந்த ஆணவ கொலையை கண்டிருத்திருந்தாலேயே போதுமே..!!!! அப்படி இருக்க …அவர்கள் நாங்கள் “ஆதிக்க” சாதியாளர்கள் தான் என்று பறை சாற்ற வேண்டியது இல்லை. ஒருவர் தன்னை தலித் என்று எப்படி அடையாள படுத்திக் கொள்ள தேவையில்லையோ அப்படியே இதுவும். தங்கள் அடையாளங்களை சொல்லியே தீர வேண்டும் என்றால் அவர்கள் தைரியமாக தாங்கள் செட்டியார், முதலியார், வன்னியர், தேவர் என்று சொல்லட்டுமே ? அப்படி சொல்வதில் ஒரு நேர்மையாவது இருக்கும். அதாவது “தான் யார் ” என்று முன் வைத்ததாக கொள்ளலாம். ஆனால் நான் “வெறி பிடித்தவள்” என்று சொல்வது போல் “அதிக்க சாதி ” என்று அறைகூவல் ஏன்? சாதியே இல்லாத நிலைக்காகத்தான் நல்லவர்கள் விரும்புவார்கள். அப்படிஇல்லாமல் “தான் யார் ” என்று சொல்ல சாதி இருந்தே தீர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் எந்த சாதியும் எந்த சாதிக்கும் குறைத்ததில்லை என்கிற விதத்திலும் தெளிவாக சாதியின் பெயரை சொல்லிவிட்டு போங்களேன்.. இப்படி ஆதிக்க சாதி, உயர் சாதி என்று சொல்வதன் மூலம் இன்னொரு சாதி தாழ்ந்த சாதி என்று குறித்தது போலாகாதா ? சிந்திக்க வேண்டுகிறேன்.

 4. சம்பிள்- ‘ஆதிக்க’ சாதி என்று இன்வர்ட்டட் கமாவுக்குள் அதைக் குறிப்பிட்டிருந்தாலே போதும்! அதாவது நீங்கள் (கொலை செய்தவர்கள்) ‘ஆதிக்கசாதி’ என்று சொல்லிக்கொள்கிறீர்களே, அதே போன்ற சாதிதான் நானும் என்று சொல்வதாக, ஆதிக்கசாதி என்ற சொல்லையே கேள்விக்கு உட்படுத்தியிருப்பதாக ஆகியிருக்கும்! வீடியோவில்? கைவிரல்களால் இன்வர்டட் கமா போல அபிநயிக்க முடியும்.

 5. THERE IS NO SUCH THING AS UPPER CASTE OR LOWER CASTE , THERE IS ONLY
  DIFFERENT CASTE.
  WHO EVER SAYS THEY ARE UPPER CASTE IS A CURSE TO THE CIVILISATION.
  DO NOT SAY I AM FROM UPPER CASTE BLA BLA JUST SAY IAM A HUMAN BEING AND I RESPECT FELLOW HUMAN BEING

ஒரு பதிலை விடவும்