நான் பரமசிவன்; எந்த நீதிமன்றமும் என்னைத் தொட முடியாது – வைரலாகும் நித்தியானந்தாவின் புதிய வீடியோ

0
804

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, குழந்தைகள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் நித்தியானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். அவர் புதிதாக வெளியிட்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ‘யாரும் என்னைத் தொட முடியாது. என்னை ஆஜர்படுத்துவதற்கு எந்த நீதிமன்றமும் கிடையாது’ என்று கூறியுள்ளார். அவர் மீது குஜராத் போலீசார் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் அவரது அகமதாபாத் ஆசிரமத்தில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதிதாக வெளியாகியிருக்கும் வீடியோவில், ‘உண்மையை தெரிவிப்பதன் மூலமாக நான் என்னுடைய வலிமையை வெளிப்படுத்துவேன். இப்போது என்னை யாரும் தொட முடியாது. நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன்’ என்று நித்யானந்தா கூறுகிறார். இந்த வீடியோவில் தலையில் வண்ணமயமான தலைப்பாகையை அவர் அணிந்திருக்கிறார். 

இணைய தளத்தில் நித்தியானந்தா பேசும் சமீபத்திய வீடியோக்கள் கடந்த மாதம் 22-ம்தேதியில் இருந்து வைரலாகி வருகின்றன. அவர் எந்த இடத்தில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.

வீடியோவில் நித்தியானந்தா தனது சிஷ்யர்களிடம் ‘இங்கிருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள். உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்களுக்கு மரணமே இல்லை’ என்று கூறுகிறார். 

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் நித்தியானந்தாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் புதிய விண்ணப்பம் அளித்திருந்தார். அதனையும் மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. 

வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் நித்தியானந்தாவை பிடிப்பதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்து பிரிவுகளும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். 

அவரிடம் நித்தியானந்தா சொந்தமாக நாட்டை உருவாக்கியுள்ளார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நாடு அமைப்பது ஒன்றும் இணையதளத்தை அமைப்பதைப் போன்றது அல்ல’ என்று கண்டனம் தெரிவித்தார். 

நித்தியானந்தாவுக்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் உள்ளனர். கைலாசா நாடு குறித்த தனது அறிவிப்பை அவர் யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.

41 வயதாகும் அவர், தான் உருவாக்கியிருக்கும் கைலாசா என்ற நாடு மிகப்பெரிய இந்து நாடு என்றும், அதற்கு எல்லைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். 

‘இந்து நாட்டிற்கு எல்லையில்லை’ என்று அவர் வீடியோவில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here