நானும், ரஜினியும் அவசியம் ஏற்பட்டால் இணைவோம் – கமல்ஹாசன்

0
137

 நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைந்து பயணிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்த போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை. அதேசமயம், ட்விட்டரில் அரசியல் செய்து வந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் களம் கண்டார்.

ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நடத்தப்பட்ட ‘கமல் 60’ என்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கி விட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லது என்றார்.

எனினும், அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து கமல், ரஜினி ஆகிய இருவரும் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. அம்மாநில முதல்வர் கமல்ஹாசனுக்கு கவுர டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தர்.

அந்த விழாவை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்போம். ரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை. அவசியம் ஏற்பட்டால் இணைவோம் நானும் அவரும் இணைவோம் என்றார்.

படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் தனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி என தெரிவித்த கமல்ஹாசன், நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை. ரஜினி சொன்ன அதிசயம் உன்மை தான் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here