சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் டி.டி.நரேந்திரன் அங்கு படித்து வரும் 18 வயது மாணவரிடம் அத்துமீறியிருக்கிறாராம்; இதை அந்த மாணவர் பதிவு செய்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞர் சசிகிரண் தன்னுடைய மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்; அந்த மாணவி இந்தக் குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களின் மூலமாக வெளியே கொண்டு வந்துள்ளார். பாலியல் வன்முறையை வென்று வாழ்கிறவர்களான ராதிகா, ஆபா, மானஸா ஆகியோர் சென்னைப் பெருநகரில் அதிகாரம் பெற்றவர்களின் பாலியல் வன்முறையைக் குறைப்பதற்கான உரையாடலை டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் ஒருங்கிணைத்தார்கள்.

பாலியல் வன்முறையை வென்று வாழ்கிற 98 பேர் சமூக வலைத்தளங்களின் வழியாக செய்த பதிவுகளைத் தொகுத்திருந்தார்கள் இந்தப் பெண்கள்; பதிவு செய்தவர்களோடு பேசி சுமார் 12 சம்பவங்களை கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைத்தார்கள். செம்மலர், ஐஸ்வர்யா ராய், சல்மா, நிர்மலா, சுவேதா, பூங்குழலி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிர்மலா இந்தக் குழுவுக்குத் தலைமையேற்றிருந்தார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு, சன் டிவியில் பணி செய்தபோது ரமேஷ் பிரபா மீது 13 வயது பெண் கூறிய குற்றச்சாட்டு, எழுத்தாளர் வி.ராம்நாராயணன் மீது 20 வயது பெண் சொன்ன புகார், மியூசிக் அகாடமியின் முன்னாள் செயலர் பப்பு வேணுகோபால் ராவ் மீது நடனக் கலைஞர் ஒருவர் அளித்த புகார், நாடகக் கலைஞர் டி.எம்.கார்த்திக் மீது இரண்டு பேர் சொன்ன அத்துமீறல் குற்றம், மிருதங்கக் கலைஞர் கும்பகோணம் சுவாமிநாதன் மீது இன்னொரு இசைக் கலைஞர் சொன்ன புகார், இசைக் கலைஞர் ரவி கிரண் மீதான புகார் உள்பட பல குற்றச்சாட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டன.

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சக உயிர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களது உடல்கள் மீது அத்துமீறுகிற நச்சுச் சூழல் நிலவுகிறது; இதனை #நானும் உரையாடல்கள் தரும் ஊக்கத்தின் வாயிலாக தகர்த்தெறிய வேண்டும்; “சமூக வலைத்தள இயக்கமாக இருக்கிற #நானும் அடித்தள மக்களின் இயக்கமாக மாற வேண்டும்” என்றார் ராதிகா. 2002ஆம் ஆண்டில் குஜராத் இனப்படுகொலைகளின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த கரு உருவி அழிக்கப்பட்ட வன்முறையையும் இந்த இயக்கம் எதிர்கொள்ளும் என்று சொன்னார் செம்மலர். கண் தெரியாத பெண்களின், மாற்றுத் திறனாளி பெண்களின் வலியையும் இந்த இயக்கம் கணக்கில் கொள்ளும் என்று ஐஸ்வர்யா ராய் கூறினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதுபோல பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு வேதி முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டுமென்று நிர்மலா, ஐ.ஏ.எஸ் சொன்னார். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்துக்குக் (2013) காரணமாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் பெண் பன்வாரி தேவிக்கும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்களைப் பெயர் சொல்லி அம்பலப்படுத்தும் இயக்கத்தைச் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய இந்தியப் பெண் ரயா சர்க்காருக்கும் #நானும் இயக்கத்தினர் வாழ்த்துகளைச் சொன்னார்கள்; இந்தப் பெண்களின் துணிவான தொடக்கங்கள் உலகை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றிக் கொண்டு வருகிறது என்று அவர்கள் பாராட்டினார்கள்.

The Raya Sarkar Interview

#MeToo: The Brave New World

#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு

செய்தியறை சமத்துவம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்