திவ்யா தன்னை ஸ்லோகம் கற்பிக்கும் தொழில்முனைவோர் என்று அடையாளப்படுத்துகிறார். “குருகுலம்” என்பது அவருடைய ஆன்லைன் மந்திர பாடசாலை.

நாதமும் தாளமும் நீயானாய் என்று சித்தர்கள் சிவனை நோக்கிப் பாடுவார்கள். ஆதியிலே வார்த்தையிருந்தது. அது தேவனாக இருந்தது என்று விவிலியம் கர்த்தரை நோக்கிப் பாடும். ஓதுங்கள் என்று கவிதையாக திருக்குர் ஆன் ஆண்டவனின் புகழ் பாட சொல்லித் தரும். சொல்லிலே இறைவன் குடியிருக்கிறான். எல்லா மந்திரங்களும் அவன் புகழைத்தான் பாடுகின்றன. வானுறையும் தெய்வமோ தூணிலும் துரும்பிலிருக்கும் தெய்வமோ வார்த்தைகளில் மட்டுமே அதன் சக்தியை உணர முடியும். ஒலியாக, இசையாக இறைவனை உணர்த்தும் மந்திரங்களுக்குள்ள சக்தி காலம் காலமாக மானுட குலத்துக்குச் சில எளிய மனிதர்களால் கையளிக்கப்படுகிறது; கடத்தப்படுகிறது. அப்படியொரு எளிய மனுஷியின் கதை இதோ:  

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராமா, ஹரே ராமா

ராமா ராமா, ஹரே ஹரே.

இந்த ஹரே கிருஷ்ணா மகாமந்திரத்தைக் கடந்த பத்தாண்டுகளாக தினமும் பல முறை உச்சரித்து வருகிறார் திவ்யா துரைசாமி. இதன் மூலம் தான் மனச்சோர்விலிருந்து விடுதலை பெறுவதாக இவர் சொல்கிறார். இதேபோல ஸ்ரீ ராஜபத ஸ்தோத்ரம், தன்வந்த்ரி ஸ்லோகம், மஹிசாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், மகாலட்சுமி அஷ்டகம் ஆகியவற்றை அடிக்கடி உச்சரிக்கிறார். இந்தப் பழக்கம் மூலமாக தான் பல கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்ததாக சொல்கிறார் திவ்யா. இந்த அனுபவத்தைக் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக 3 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொண்டு சேர்க்கிறார். பெங்களூருவில் வாழும் தமிழரான திவ்யா “குருகுலம்” என்ற ஆன்லைன் ஸ்லோக பாடசாலை மூலமாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற இந்தியப் பெருநகரங்களில் வாழும் குழந்தைகளுக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழும் குழந்தைகளுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்வதற்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

”ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மஹிசாசுரமர்த்தினி ஸ்தோத்ரத்தைச் சொல்லும்போது எக்கச்சக்கமான மன தைரியம் உண்டாகிறது” என்கிறார் திவ்யா. ஒவ்வொரு வாரமும் மூன்று முறையாவது கோவிலுக்குப் போவது என்பதை உறுதியாக கடைபிடிக்கிறார்.தினமும் நான்கு முறை மந்திர ராஜபத ஸ்தோத்ரத்தைச் சொல்வதன் வழியாக கஷ்டங்களை வென்று வருவதாக கூறுகிறார். ”தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பிரார்த்தனையில் செலவிடுகிறேன்.” குழந்தைகளுக்கு ஸ்லோகங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது கல்விக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் தைரியத்துக்காகவும் பிரார்த்திக்க கற்றுத் தருகிறார் திவ்யா. தனது ஆரோக்கியத்துக்காக தன்வந்த்ரி ஸ்லோகத்தை உச்சரிக்கிறார் இவர். ”சோளிங்கரிலுள்ள யோக நரசிம்மரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.”

“அப்பா எனக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லித்தந்தார். அம்மா எனக்கு மஹாலட்சுமி அஷ்டகத்தைச் சொல்லித் தந்தார். சரியான உச்சரிப்புடன் அர்த்தம் புரிந்து மந்திரங்களைச் சொல்லும்போது ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரும் சக்தியும் வருகிறது” என்கிறார் திவ்யா. பேச்சு சிரமமுள்ள குழந்தை ஒன்று தன்னிடம் மந்திரங்களைக் கற்றுக்கொண்ட பின்னர் தங்குதடையின்றி மந்திரங்களை வகுப்பில் உச்சாடனம் செய்த தருணம் தனது பணிக்குக் கிடைத்த பெரிய கவுரவம் என்று கூறுகிறார். மந்திரங்களை வாய்விட்டுப் படிப்பது குழந்தைகளின் மொழி உச்சரிப்புத் திறனையும் கணக்குப் பாடம் கற்றுக் கொள்ளும் திறனையும் மேம்படுத்துவதைக் கண்கூடாக பெற்றோர்கள் பார்ப்பதாக சொல்கிறார் திவ்யா. பல சந்தர்ப்பங்களில் தாயும் குழந்தையும் இணைந்தே தன்னிடம் மந்திரங்களைக் கற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஸ்லோகங்களைக் கற்றுக்கொள்ளும் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளின் நரம்புமண்டல இயக்கத்தில் கணிசமான முன்னேற்றங்களைக் காண்பதாகவும் திவ்யா சொல்கிறார்.

“திருப்பதி பெருமாள் எனது இஷ்ட தெய்வம்” என்று சொல்லும் திவ்யா ஒருபோதும் தான் மந்திரங்களைக் கற்பிக்கும் தொழில்முனைவோராக மாறுவேன் என்று நினைத்ததில்லை. “நான் கார்ப்பரேட் வேலைக்கான ஆளாகவே என்னை நினைத்தேன்.” சில குழந்தைகளிடமிருக்கும் வன்மத்தைக் குறைக்கவும் சாதுவான குழந்தைகள் வன்முறையான சக குழந்தைகளைத் தைரியமாக எதிர்கொள்ளவும் மந்திரங்கள் உதவிய கதைகளைப் பெற்றோர் திவ்யாவிடம் சொல்கிறார்கள். குழந்தைகளுக்குத் தோழியாகவே தன்னை நடத்திக் கொள்கிறார். ”தினமும் நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.” படியுங்கள். புரிந்துகொள்ளுங்கள். நினைவில் நிறுத்துங்கள் என்பதுதான் திவ்யாவின் கற்பிக்கும் பாணி. ஐந்தாவது முறை ஆழ்ந்து படிக்கும்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு மந்திரம் மனதில் தங்கி விடுகிறது. அம்மாவின் வற்புறுத்தலால் எந்த ஆர்வமும் இல்லாமல் வரும் குழந்தைகள்கூட சில வகுப்புகளுக்குப் பின்னர் ஆர்வம் கொள்கிறார்கள். தினசரி வகுப்புகளை 15 நிமிடத்துக்குப் பழைய பாடங்களை நினைவூட்டுவது, 15 நிமிடங்களுக்குப் புதிய மந்திரங்களைச் சொல்லித் தருவது என்று வடிவமைத்திருக்கிறார். குழந்தைகள் நுண்ணறிவு மிகுந்தவர்களாக இருப்பதாலும் எளிதில் அவர்கள் மனதில் மந்திரங்கள் பதிவதாலும், தான் தேர்வு செய்த ஸ்லோகம் கற்பிக்கும் தொழில் உயிர்ப்புடன் இருப்பதாக மகிழ்கிறார் திவ்யா.

The Raya Sarkar Interview

எம்மி விருதுக்குப் போன சாதனைத் தமிழச்சி சாதனா

Nudge for Media Freedom

கப்பலோட்டும் தமிழச்சி ரேஷ்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here