நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கதான் 2019 தேர்தல்; மோடி-அமித் ஷாவை அகற்ற எந்த கூட்டணியாக இருந்தாலும் ஆதரவு: அர்விந்த் கெஜ்ரிவால்

0
170
Arvind Kejriwal


மோடி-அமித் ஷா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எந்தவொரு மதச்சார்பற்ற மெகா கூட்டணி அரசாக இருந்தாலும் ஆதரவு அளிக்கப்படும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் மோடி-அமித் ஷா கூட்டணியை தோற்கடிக்க எந்தவொரு மதச்சார்பற்ற கூட்டணிக்கும் ஆம் ஆத்மி ஆதரவு தெரிவிக்கும் என்றார். 

இதுதொடர்பாக, அவர் மேலும் பேசுகையில், 

“டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்தை பெறுவதற்கான எங்களது போராட்டம் தொடரும். 

இந்தியாவில் ஊடுருவியவர்களுள் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களை தவிர்த்து மற்றவர்கள் மட்டும் வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அந்த மூன்று மதங்களை தவிர்த்து மற்ற அனைத்து மதங்களையும் அகற்ற நினைக்கும் பாஜகவின் திட்டம் இதன்மூலம் உறுதியாகிறது. 

எந்த கூட்டணியாவது டிவிட்டரில் அமைந்துள்ளதா? என்று ராகுல் காந்தியை கேட்கிறேன். மோடியும், அமித் ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதற்கு ராகுல் காந்தி தான் பொறுப்பு. 

மோடி-அமித் ஷா கூட்டணியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எந்தவொரு மெகா கூட்டணி அரசாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க தான் இந்த 2019 தேர்தல். 

நாம் முதலில் இந்தியர்கள். அதன்பிறகு தான் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் எல்லாம். நமது ஒற்றுமை சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. நாம் மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரியாமல் இருந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here