பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் நாட்டை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: ‘‘பாஜக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு கண்டிராத மிகமோசமான ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் நாட்டையே அழித்து விடுவார்கள். ஹிட்லர் எதை செய்தாரோ அதையே செய்வார்கள், அரசியல் சட்டத்தை ஒழித்துக் கட்டுவார்கள், தேர்தலை நிறுத்தி விடுவார்கள். எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்து விடுவார்கள்.நாட்டுக்கு ஆபத்தான பாஜக அரசை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here