சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியது. இந்நிலையில், அந்த வைரசில் இருந்து உருமாற்றம் பெற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. இதுமுன்னதாக பரவிய கொரோனா தொற்றை விட வீரியமிக்கதாகவும் 70 சதவீதம் வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 11 ஆம் தேதி வரை புதிய வகை கொரோனா பாதிப்பு 96 ஆக இருந்தது. நேற்று மேலும் சிலருக்கு புதியவகை கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜன. 13) நாட்டில் புதிய வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துமொத்த பாதிப்பு 102-ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கொரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனுக்கான விமானபோக்குவரத்து கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.