நாட்டில் காட்டாட்சி நடந்தால் எப்படியிருக்குமோ, அதுபோன்ற முறையில் குற்றவாளிகள் நடந்துள்ளனர் – கதுவா தீர்ப்பின் போது நீதிபதி

0
356

சமூகத்தில் காட்டாட்சி நடந்துவந்தால் எப்படியிருக்குமோ, அதுபோன்ற முறையில் இந்த வழக்கின் குற்றவாளிகள் நடந்துகொண்டுள்ளனர் என்று தீர்ப்பளித்தபோது 
பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்புக் குறித்து சிறுமியின் தந்தைக் கூறியதாவது – குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படாததும், வழக்கிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதும் அதிருப்தி அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக்  கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்படிருந்த 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

இதில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தடயங்களை அழித்த குற்றத்துக்காக காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்குத் தொடர்பாக, கதுவா சிறுமியை அடைத்து வைத்திருந்த கோவிலின் பாதுகாவலராக இருந்த சஞ்சிராம், சஞ்சிராமின் மகன் விஷால் , சஞ்சிராமின் சிறுவயது மருமகன், சிறப்பு போலீஸார் இரண்டு பேர் தீபக் கஜூரியா (டிப்பு) , சுரேந்தர் வர்மா, மற்றும் பர்வேஷ் குமார் (மன்னு) ஆகியோரை கைது செய்திருந்தது. 

சஞ்சிராம் முதன்மைக் குற்றவாளியாக இருக்கிறார். சஞ்சிராமிடம் 4 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று முக்கிய சாட்சியை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் தலைமை காவலர் திலக் ராஜ் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் தத்தா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஜூன் 8 அன்று பதான்கோட் மாவட்ட குற்றவியல் நீதி மன்றம் வன்புணர்வு மற்றும் கொலை குற்றங்களுக்காக ஏழு பேர் மீது குற்றம் சுமத்தியது.

சஞ்சி ராம் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் தனது தீர்ப்பை திங்கள்கிழமை காலையில் வெளியிட்டது. அப்போது சஞ்சி ராம், தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார், ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா ஆகிய 6 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. சஞ்சி ராமின் மகன் விஷாலுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி நீதிமன்றம் விடுவித்தது.

பின்னர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கான தண்டனை விவரங்களை பதான்கோட் நீதிமன்றம் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிட்டது. அப்போது சஞ்சி ராம், தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் நீதிபதி விதித்தார்.


தடயங்களை அழித்த குற்றத்துக்காக ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


8-ஆவது நபர் சிறுவர் என்று தெரிவித்து, ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் , கதுவாவில் எட்டு வயது சிறுமியைக் கோவிலுக்குள் அடைத்து வைத்து, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்துக்கோ அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்கவோ ஜம்மு காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது 

வழக்கு விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும் பதான்கோட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது . 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சண்டீகருக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கொலைசெய்யப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சிறுமி வசித்து வந்த பகுதியில் வாழ்ந்த (பக்கர்வால் சமூகம் ) சிறுபான்மை நாடோடி இனத்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகவே இந்தச் சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.