மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 89.

வயது மூப்பு காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட சோம்நாத் சட்டர்ஜி , கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தை அடுத்து, அவர் சமீபத்தில் தான் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், கவலைக்கிடமான நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், சில வேளைகளில் இதயம் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்திருக்கலாம். அந்த வகையில் சோம்நாத் சட்டர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அதிலிருந்து மீண்ட அவர், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மிகத் தீவிர கிசிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தார்.

அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சோம்நாத் சட்டர்ஜிக்கு 1996-இல் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது அளிக்கப்பட்டது.

சோம்நாத் சட்டர்ஜி 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்