நாசா எக்ஸ் 57 – மேக்ஸ்வெல் மின்சார விமானம்

0
176

 

இயற்கை வளங்களில் இருந்து எடுக்கப்படும் எரிசக்தியின் தேவை அதிகரித்து வருவதும், இதனால் இயற்கை வளங்கள் அழிந்து, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதும், அதைத் தடுக்க வேண்டும் என்று நினைப்பதே இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணமாகும்.

எரிபொருளில் இருந்து மின்சாரத்துக்கு வாகனப் போக்குவரத்து மாற்றம்பெறத் தொடங்கிவிட்டது. சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
 


 மனித இனத்தை மனிதர்களே அழிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் எரிபொருளில் இருந்து மின்சாரப் போக்குவரத்துக்கு மாற்றம் காண்பதில் பல கோடிகளை முதலீடும் செய்து வருகின்றன.
 கார், ரயில் எனத் தொடங்கி இந்த மாற்றம் விமானப் போக்குவரத்தையும் விட்டு வைக்கவில்லை. ஆளில்லா சிறிய விமானங்கள் (ட்ரோன்) பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகளைக் கொண்ட மின்சார விமானத்தை உருவாக்குவது பல ஆண்டுகளாக சவாலாக இருந்தது வந்தது.
 

அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் 2015 -ஆம் ஆண்டு முதல் மின்சார விமானங்களை உருவாக்குவதில் மும்முரமாக இறங்கின. சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
 

ஆனால், அதிக எடை கொண்ட பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு விமானங்கள் பறப்பது சாத்தியமில்லாத காரணத்தால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
 இந்நிலையில், உலகின் முதல் மின்சார விமானத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உருவாக்கியுள்ளது. “எக்ஸ் 57 – மேக்ஸ்வெல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின் விமானத்தில் 14 மின்சார மோட்டார்கள் உள்ளன. இதற்கு மின்சக்தியை அளிக்க பிரத்யேகமாக லித்தியம் பேட்டரிகளும், கனமில்லா இறக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 14 சிறு ப்ராபெல்லர் ஃபேன்கள் நிறுவப்பட்டுள்ளன. இவைதான் இந்த விமானத்தின் ஏற்றத்தின்போதும், இறக்கத்தின்போதும் செயல்படும்.

 “எக்ஸ் 57 – மேக்ஸ்வெல்’ மின்சார விமானத்தை அடுத்த ஆண்டு வானில் பறக்க விடத் திட்டமிட்டுள்ள நாசா, இந்த தொழில்நுட்பம் பிற விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பேட்டரிகளை துரிதமாக ரீ சார்ச் செய்து வெகு தூரத்துக்கு விமானத்தை இயக்க வேண்டியது அடுத்தகட்ட முயற்சியாகும் என நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 போக்குவரத்து இல்லாமல் உலகமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதால், சுற்றுச்சூழலை மாசடையாமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். இதற்கு இதுபோன்ற நவீன கண்டுபிடிப்புகள் உதவும்.
 -அ.சர்ஃப்ராஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here