நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நீட் இல்லை ; ஒரே வரி; ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ6000 – ராகுல் காந்தி வாக்குறுதி

0
239
Rahul Gandhi

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கிரிஷ்ணகிரி, தேனி, சேலம், மற்றும் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். 

தமிழக மக்கள் விரும்பாததை உலகில் உள்ள எந்த ஒரு சக்தியாலும் அவர்கள்மீது  திணிக்க இயலாது என தேனியில் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

தேனியில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மற்றும் ஆண்டிபட்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

சேலம், கிருஷ்ணகிரி, மதுரையில்  திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்  ராகுல் காந்தி.  

அப்போது  ராகுல் காந்தி பேசியதாவது –  

”காங்கிரஸ் கட்சியின் மீது தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டுள்ள பற்று எனக்கு பூரிப்பு தருகிறது. தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழகத்தின் வரலாற்றை நான் மதிக்கிறேன். ஆனால், நரேந்திர மோடி தமிழக மக்களின் மீது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கப் பார்க்கிறார்.

தமிழக மக்கள் விரும்பாததை எந்த ஒரு சக்தியாலும் ஒருபோதும் திணிக்க முடியாது. பிரதமர் மோடி பெரியாரின் புத்தகங்களை படிக்க வேண்டும். அவற்றை நான் பிரதமருக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்.

மோடி வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களை வெறுப்பால் வெல்ல முடியாது. ஆனால், அன்புக்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் பிரதிபலனாகத் தருவார்கள். மோடி நடத்தும் வெறுப்பு அரசியலுக்கு நான் அன்பாலேயே பதில் சொல்ல விரும்புகிறேன். அதனால்தான் இங்கு திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. இது பெரிய விஷயங்களுக்கான கூட்டணி.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்து மாநில மக்களின் உணர்வுகளை உள்வாங்கிய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். தமிழக மக்களின் உணர்வுகள், விவசாயிகளின் உணர்வுகள், ஏழை மக்களின் உணர்வுகள், தொழிலாளிகளின் உணர்வுகள், இளைஞரின் உணர்வுகள் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பிரதிபலிக்கிறது.

தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த அனிதாவை கவுரவப்படுத்த எங்கள் அறிக்கையில் ஒரு வரி இருக்கிறது. அந்த வரி.. நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாநிலங்களே முடிவு செய்யும் என்ற உரிமையை வழங்கும் வரி. எங்கள் தேர்தல் அறிக்கையை உருவாக்கும்போது தமிழ்நாட்டில் அனிதா என்ற மாணவியைப் பற்றியும் அவளது இறப்பைப் பற்றியும் கூறினார்கள். அதனாலேயே தமிழ்நாட்டுக்கு நீட் இல்லை என்று முடிவு செய்தோம். அனிதாவுக்கு நேர்ந்தது யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் இந்த முடிவு.  தமிழகத்திலுள்ள பல மாணவ, மாணவிகளுக்கும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளதை அறிந்தேன். எதையுமே தமிழகத்தின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம். 

பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோருக்கும் பணத்தை வங்கிக் கடன்கள் வாயிலாக வழங்கிவிட்டார்.  கறுப்புப் பணத்தை மீட்டு ஏழை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார். செய்தாரா இல்லை.

பணக்காரத் தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் உதவினார். மோடியால் அம்பானிக்கும், அதானிக்கும் பணம் கொடுக்க முடியும் என்றால் என்னால் ஏழைகளுக்குப் பணம் கொடுக்க முடியும். நான் பொய் சொல்ல வரவில்லை. அது எப்படி முடியும் என்று சொல்கிறேன். ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்கப்படும். 

இந்தத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்துக்கு எந்த ஒரு சிறு பங்கமும்கூட ஏற்படாமல் நிறைவேற்றப்படும். இதுவரை உலகில் இத்தகைய திட்டத்தை யாரும் செயல்படுத்தியதில்லை. நியாய் யோஜனா இன்ற திட்டத்திற்கு மேலும் நியாயம் செய்ய இதன் மூலம் கொடுக்கப்படும் நிதியுதவி ஏழைக் குடும்பங்களின் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு தேவைப்படும் பணம் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து எடுக்கப்படும் என்று மோடி எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார். நான் உறுதியளிக்கிறேன் நடுத்தர மக்களிடமிருந்து நாங்கள் எடுக்கமாட்டோம். 

மெஹுல் சோக்‌ஷி, நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற திருடர்களிடமிருந்து திருடியவற்றை பறித்து ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என்றார். 

மக்களிடம் வாங்கும் சக்தி குறையும்போது, தயார் செய்யும் பொருட்களை வாங்க ஆளில்லாமல் தொழில் மந்தமாகிறது. தொழிற்சாலைகள் உற்பத்தி நின்று விடுகிறது. எனவே வேலையில்லா திண்டாட்டம் பெறுகிறது. நரேந்திர மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தின. 

பெட்ரோலை காலி செய்துவிட்டு, என்ஜினை ஆன் செய்து சாவியை 15, பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் அரசு, பெட்ரோலை நிரப்பி, சாவியை மக்களிடம் கொடுக்கப்போகிறது. அதன் பிறகு பொருளாதாரம் வளர்ந்து நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். 

நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை. எங்களால் நியாய் திட்டத்தை நிறைவேற்ற முடியும். கோடீஸ்வரர்களுக்கு பணம் தர மாட்டோம், மாறாக நாட்டில் உள்ள ஏழைகளுக்குத்தான் வழங்குவோம்.

பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் எளிய மக்களின் பணத்தை திருடி விட்டார். மக்களை வங்கி வாசலிலும் ஏடிஎம் வாசலிலும் காத்துக் கிடக்க வைத்தார். அதன் பின்னர் ஜிஎஸ்டி எனப்படும் கப்பார் சிங் வரி மூலம் சிறு தொழில்களை முடக்கியுள்ளார். 

 நெசவாளிகள் நூல் வாங்க வரி செலுத்த வேண்டியிருந்தது . நெசவுத் தொழிலுக்கான கருவிகளை வாங்க வரி செலுத்த வேண்டியிருந்தது . 5 விதமான வரியை மக்கள மீது விதித்தார்.  28% வரி. காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் உண்மையான ஜிஎஸ்டி வழங்குவோம்.

ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிமையான ஜிஎஸ்டி வரி என்ற சீர்திருத்தம் செய்வோம்.

தமிழகத்தின் ஜவுளி கேந்திரமான திருப்பூர் நகரம்,  ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பட்டுத் தலைநகரான காஞ்சிபுரம் தொழில் முடங்கி தவிக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றிற்கு தீர்வு காணப்படும். மிகக் கொடுமையான வரியை விதித்தார் மோடி. ஆனால் நாங்கள் ஒரே வரி எளிய வரியை விதிப்போம்.

அடுத்ததாக விவசாயிகள் நலன் பற்றிப் பேச விரும்புகிறேன்.  லட்சம், கோடிகளில் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பெரும் முதலாளிகளை இன்னும் சட்டத்துக்கு உட்படுத்த முடியவில்லை.

ரூ.45,000 கோடி கடன் வாங்கிய அனில் அம்பானி மீது நடவடிக்கை இல்லை. ஆனால் ரூ.20,000 கடன் வாங்கிய விவசாயி சிறை செல்ல வேண்டியுள்ளது.இது அநீதி அல்லவா? இந்த அநீதியைத் துடைக்க விவசாயக் கடன் சட்டத்தில் நாங்கள் திருத்தம் கொண்டு வருவோம். இனி எந்த ஒரு ஏழை விவசாயியும் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்த இயலாததற்காக சிறை செல்ல வேண்டியிருக்காது.

விவசாயிகளுக்கு என தனி நிதி நிலை தாக்கல் செய்யப்படும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம்.  அந்த அறிக்கையில் விவசாய உற்பத்திப் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்ன, கொள்முதல் விலை என்ன, பயிர்க்கடன் எவ்வளவு, ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு என்னவாக இருக்கும் என்பதெல்லாம் முன் கூட்டியே தெரிவிக்கப்படும்.

நம் நாட்டில் இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டுமானால் அனுமதி பெற அரசு அலுவலகங்களில் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது.

ஆனால், அனில் அம்பானி ராணுவ ஒப்பந்தத்தை எந்த கெடுபிடியும் இன்றி பெறுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தொழில் தொடங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். இளைஞர்கள் தொழில் துவங்கி 3 வருடங்கள் வரைக்கும் அரசிடம் எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை.  இளைஞர்களுக்கு 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

பெண்களுக்கு வேலையில் , அரசியலில், நாடாளுமன்றத்தில், ராஜ்ய சபாவில், சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு தரப்படும். ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு 33% த்தை ஒதுக்கி கொடுப்போம். 

இந்தத் தேர்தல் இரண்டு கொள்கைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் . 

தமிழகத்துக்கு நான் ஒவ்வொரு முறை வந்த திரும்பும்போதும் உற்சாகத்தைப் பெற்றுச் செல்கிறேன். தமிழ் மக்களுடனான எனது உணர்வு அரசியல் பூர்வமானது அல்ல. உணர்வுப்பூர்வமானது என்றார் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here