சிபிஐ இயக்குநராக புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்ற அலோக் வர்மா, இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார். இதையடுத்து, 13 சிபிஐ அதிகாரிகள் தங்களது முந்தைய பொறுப்பை வகிக்கவுள்ளனர்.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் பின்னர் சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

பணியை தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும் மிக முக்கிய கொள்கை ரீதியிலான முடிவுகளை அலோக் வர்மாவால் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பொதுவாக சிபிஐ இயக்குநரை பணியில் இருந்து மாற்ற வேண்டுமெனில், பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, அலோக் குமாருக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மா புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். 77 நாள்களுக்கு பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வந்த அவர், தனது அலுவலகப் பணிகளை தொடர்ந்தார். மீண்டும் பணிக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்து இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுளை அலோக் குமார் வர்மா ரத்து செய்து விட்டதாக, மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம், வரும் 31ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது .

அலோக் குமாருக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் . பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம்பெறும் இந்த உயர்நிலைக் குழுவில் தனது பிரதிநிதியாக மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு, புதன்கிழமை இரவு கூடி விவாதித்தது. எனினும், அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. முன்னதாக, அந்தக் கூட்டத்தில் தன்னால் உடனே பங்கேற்க இயலாது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here