நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று நாகாலாந்து மாநிலத்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை பொதுமக்கள் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடம்

மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத்தில் இந்திய ராணுவத்தின் ‘பாரா’ சிறப்புப் படையினர் மீது மீது நாகாலாந்து மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் அமலாக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்னும் மோன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு விசாரணைக் குழு

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளதாக, பிபிசி இந்தி பிரிவைச் சேர்ந்த செய்தியாளர் பினாகி தாஸ் கூறியுள்ளார்.

ஏடிஜிபி சந்தீப் தாம்கட்கே மேற்பார்வையில், இக்குழு விசாரணை மேற்கொள்ளும் என மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இக்குழுவில், எல்.ஜமீர் ஐபிஎஸ், எம்.ரூபா ஐபிஎஸ், மனோஜ் குமார் ஐபிஎஸ், நாகாலாந்து காவல் பிரிவைச் சேர்ந்த கில்லாங் வாலிங், ரேலோ அய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் இக்குழு விசாரணையை முடிக்கும் எனவும், நாகாலாந்து தலைமைச் செயலாளர் ஜே. ஆலம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகர் கோஹிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணிகளில் ஈடுபட்டனர். கோஹிமாவில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது எனவும், மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் செய்தியாளர் ஹெச்.ஏ.ஹாங்னாவ் கோன்யாக் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து

சனிக்கிழமை என்ன நடந்தது?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இங்குள்ள ஒடிங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று நாகலாந்து காவல் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

என்.எஸ்.சி.என் (கே) மற்றும் உல்ஃபா ஆகிய கிளர்ச்சிக்குழுக்கள் மோன் மாவட்டத்தில் பலம் பொருந்தியவர்களாக உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

மாநில அரசால் அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழு இதை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ, உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடைபெற்ற சம்பவம் குறித்து அசாம் ரைஃபிள்ஸ் கவலை தெரிவித்திருந்தது.

தலைநகர் கோஹிமாவில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலம்
,தலைநகர் கோஹிமாவில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலம்

அசாம் ரைஃபிள்ஸ் படையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு அதிகாரிகளால் உறுதி வழங்கப்பட்ட விசாரணை முடியும் வரை அனைத்து சகோதர சகோதரிகளும் அதீத பொறுமை காக்க வேண்டும் என்று அசாம் ரைஃபிள்ஸ் தெரிவித்துள்ளது.

நாகாலாந்து மாநில பாஜக நாகாலாந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு உண்மையான விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது எனவும், மத்திய அரசு உண்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் தங்களது சொந்த நிலத்தில் பாதுகாப்பாக இல்லாத நிலையில், உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டிருக்கிறது,” என பதிவிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதின் ஓவைசி ஆகியோரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here