தொலைத்தொடர்பு துறையில் அதிகரித்திருக்கும் தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்தப் போவதாக வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

நாட்டில் சுமார் 120 கோடி பேர் தொலைபேசி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நிலையில், ஜியோ நிறுவனம் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய  தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன

செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் போதிலும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களாக பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கீழ் நோக்கியே செல்வதால், சந்தையில் அவற்றின் பங்கும் சரிவைச் சந்தித்து வருகின்றன. 

அதேசமயம் ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் சந்தை மதிப்பில் சரிவை கண்டுவருவதாகவே கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அதிகப்‌படியான வா‌டிக்கையாளர்களை கவர்ந்துள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்தப் போவதாக வோடாஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்தரமான சேவையை வழங்குவற்காக இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக இரு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் கட்டண உயர்வு எவ்வளவு என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. வோடாஃபோன் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here