நவராத்திரியை கொண்டாடுவதற்கு சில தினங்களே உள்ளன. இந்த ஒன்பது தினங்களும் மிகவும் விசேஷம். கொலு வைத்து கொண்டாடுபவர்கள் அண்டை வீட்டில் உள்ளவர்களையும் குழந்தைகளையும் கூப்பிடுவார்கள். குழந்தைகளைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்வார்கள். பின்பு அவர்களுக்குப் பரிசுப்பொருட்களும் சுண்டலும் கொடுப்பார்கள். நவராத்திரி முடியும் வரை தினமும் சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து பின் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். கோவில்களிலும் இதுபோல் சுண்டல் கடவுளுக்கு நைவேத்யம செய்த பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். நான் என்னுடைய சிறு வயதில் பிரசாதம் வாங்குவதற்காகவே அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வதுண்டு. இந்த ஒன்பது நாள் மட்டும்தான் சுண்டல் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. வெள்ளை கொண்டைக் கடலை, காராமணி, கடலைப் பருப்பு, பச்சைப்பட்டாணி இதில் ஏதாவது ஒன்றை சுண்டல் செய்து சாப்பிடலாம்.

முக்கியமாக வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலைநேர சிற்றுண்டியாக கொடுக்கலாம். நான் காலை நேர உணவிற்கு ஆப்பம் கடலை கறி செய்யும் பொழுது சுண்டல் செய்வதற்காக கடலையில் சிறிது எடுத்து வைத்துக் கொள்வேன். மாலை வேளை. தேனீர் அருந்தும் சமயம் கொடுக்கலாம். சுண்டல் செய்வதற்கான முறையைச் சொல்லுகிறேன் செய்து பாருங்கள் .

தேவையான பொருட்கள்:

கருப்புக் கொண்டைக் கடலை – 1 கிண்ணம்
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு

கொத்தமல்லி விதை – 1 மேசைக் கரண்டி
சிவப்பு மிளகாய் – 4
மிளகு – கால் தேக்கரண்டி

தாளிப்பதற்கு

கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 மேசைக் கரண்டி

செய்முறை :

கடலையைக் கழுவி நீர் ஊற்றி பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பத்து மணிநேரம் கழித்து தண்ணீரை வடிய விட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடலையைப் பத்து நிமிடத்துக்கு வேக விடவும். கடலை மிருதுவாக இருக்க வேண்டும். அதே சமயம் தோல் உரியும் அளவிற்கு வேக விடக்கூடாது. கடலை வேகும் சமயம் வறுப்பதற்கு தேவையானவற்றை பார்க்கலாம். கொத்தமல்லி விதை,சிவப்பு மிளகாய்,மிளகு இவற்றை வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். குக்கரிலிருந்து தண்ணீரை வடிய விட்டு கடலையை எடுத்துக்கொள்ளவும் . வடித்த நீரை வீணடிக்க வேண்டாம். சப்பாத்திக்கு மாவு பிசைய உபயோகபடுத்தலாம் .

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகை போடவும். கடுகு வெடித்ததும் அதில் கருவேப்பிலையை போடவும். பொரிந்ததும் கடலையுடன் சிறிது உப்பு போட்டு வதக்கவும். உடன் வறுத்து அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும். சுவையான சுண்டல் ரெடி. எல்லோருக்கும் கொடுத்து மகிழுங்கள்.