மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. அனைத்து மண்டல அலுவலர்களும் இறைச்சி கடைகள், கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதே போல் ஆடு/மாடு, கோழி இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
Also Read 👇 .பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 04.11.2021 அன்று முழுவதும் அனைத்து, இறைச்சிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர். துப்புரவு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க மண்டல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.