உலகம் முழுவதும் சக்தி மயம் என்பதை உணர்த்தவே நவராத்திரி கொண்டாடப் படுகிறது. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் சக்திக்கு ஒன்பது நாள் நவராத்திரி.

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்களாகக் கருதப்படுகின்றன. எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே ஒன்பது நாளும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.

* அம்பிகை விரதம் இருந்த நாட்கள்தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அசுரனை ஜெயித்த தினம் விஜயதசமி. வடநாட்டில்  9 நாள்கள் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் பூஜை செய்து வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளையும் அம்பிகை அருள்வாள் என்பது நம்பிக்கை. தீமைகள் மறைந்து நன்மையும், தர்மமும் தழைத்தோங்க வேண்டும் என்பதே நவராத்திரியின் குறிக்கோளாகும்.

* புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல்நாள் நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது. நவமி வரை ஒன்பது நாள்களும் விழா கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாளான தசமியுடன் விஜயதசமி விழா நிறைவு பெறுகிறது.

* நவராத்திரி பண்டிகையைச் சாரதா நவராத்திரி என்றும் தசரா பண்டிகை என்றும் கூறுவர். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பது முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதியைக் குறிக்கும். ஆதலால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை, அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் பூஜித்து வழிபட வேண்டும்.

* துர்கையை வணங்குவதால் தீரமும், வீரமும், லட்சுமியை துதிப்பதால் சீரும், செல்வமும், சரஸ்வதியைப் போற்றுவதால் கல்வியும், அறிவும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம். விஜயதசமி, ஜெயம், வீரம், செல்வம், கல்வி அனைத்துக்கும் முக்கிய தினமாக கருதப்படுகிறது.

* விஜயதசமி என்றால் வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும். அன்றைய தினம் புதுதொழில், கல்வி, பாட்டு இவைகளைத் தொடங்க மிகவும் சிறந்தது. பழங்கால தமிழ் மன்னர்கள் விஜயதசமியன்று துர்கா பூஜை செய்து வழிபட்டு எதிரிநாட்டின் மீது படையெடுத்து செல்வதுண்டு.

* விஜயதசமியன்று மக்கள் நல்ல காரியங்களைத் தொடங்குகின்றனர். இந்த நாளில் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியைத் தொடங்கி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது.

* நவராத்திரி விழாவை உத்தரபிரதேசத்தில் ராம லீலா என்றும் வங்காள தேசத்தில் காளி துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள். நவராத்திரி சமயத்தில் கர்நாடகத்தில் மைசூரில் நடக்கும் தசரா பண்டிகை உலகப் புகழ்பெற்றது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here