நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் கைது

0
318


சிவகங்கையில் உள்ள தனியார் குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரியில் பயின்ற மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக, அக்கல்லூரியின் தாளாளரும், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவருமான சிவகுரு துரைராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இக் கல்லூரியில் பயின்ற 19 வயது மாணவிக்கும், சென்னையைச் சேர்ந்தவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் வீட்டுக்குச் சென்ற இம்மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் விசாரித்ததில், நர்சிங் கல்லூரியில் படித்தபோது அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி, அக்கல்லூரியின் தாளாளார் சிவகுரு துரைராஜ் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர் . அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜை போலீஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்தனர்.

இக்கல்லூரியில் சிவகுரு துரைராஜால் பாலியல் ரீதியாக எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டனர்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரும் போலீஸார், சிவகுரு துரைராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 

http://dinamani.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here