பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி: “உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்” – புதிய தகவல்கள்

0
264

இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வாகன தொடர் இதனால் மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட நிகழ்வு, கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோதி, “என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. பஞ்சாபில் இன்று என்ன நடந்தது?

பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்.

வானிலையால் பயணத்தில் திடீர் மாற்றம்

மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார்.

இதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தபோது, ​​​​சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன. இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி 18 கி.மீ தூரத்தில் உள்ளது.

இது குறித்து இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி. பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜித் மிஸ்ரா சென்ற வாகன தொடரணியை மறிக்கும் நோக்குடன் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்கள் மீது வாகனத்தை ஏற்றிய சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளதால் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அரசியலாகும் விவகாரம்

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது காங்கிரசின் சதி என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் பல ட்வீட்களை செய்திருந்தார்.

அதில், பஞ்சாபின் காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு எதிரானது, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. போராட்டக்காரர்கள் பிரதமரின் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் பஞ்சாப் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைக்கு வழி பாதுகாப்பானது என்று உறுதியளித்தனர். பஞ்சாப் முதல்வர் சன்னி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகவோ, இந்தப் பிரச்னை குறித்து எந்த விவாதத்திற்காகவோ போனைக்கூட எடுக்கவில்லை என்று நட்டா கூறியிருந்தார்.

இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, “காங்கிரஸின் மோசமான நோக்கங்கள் தோல்வியடைந்து விட்டன. காங்கிரஸ் மோதியை வெறுப்பதாக நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், இந்திய பிரதமருடன் மோத வேண்டாம். உங்களுடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்று கூறினார்.மேலும் அவர், “பிரதமரின் பாதுகாப்புப் படையினரிடம் சாலை பயணத்தை மேற்கொள்ளலாம் என வேண்டுமென்றே பொய் கூறப்பட்டதா? பிரதமரின் வாகனங்கள் முழுவதையும் நிறுத்த முயற்சி நடந்தது, பிரதமரின் பாதுகாப்பை 20 நிமிடங்களுக்கு நிறுத்த வைக்கும் வகையில் அங்கு அவர்களை அழைத்துச் சென்றது யார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விளக்கம்

ஆனால், இந்த விவகாரம் தொடர்பான முழு விவரத்தை விளக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இனறு மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரதமரின் வருகையின்போது அதற்கு எதிராக சிலர் சாலை மறியல் செய்ததால் பிரதமர் திரும்பியதற்காக வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.

பஞ்சாப்
சரண்ஜித் சிங் சன்னி

மோசமான வானிலை மற்றும் எதிர்ப்பு போரட்டங்கள் காரணமாக பயணத்தை நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்திடம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டோம். பிரதமரின் திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

“திடீரென சிலர் அங்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.இதில் சதி இருந்தால் முழு விசாரணை நடத்தப்படும். பஞ்சாப் மண்ணில் பிரதமரை வரவேற்கிறோம். பிரதமர் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இதில் பஞ்சாப் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, வழியில் ஒருவர் வந்து அமர்ந்தபோது, மற்றவர்களும் ​​திடீரென வந்து அமர்ந்து விட்டனர். அதை பாதுகாப்பு அச்சுறுத்தலோடு இணைப்பது அரசியலாக இருக்கலாம்,” என்று சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

விவசாயிகளால் டெல்லியில் ஓராண்டு போராட்டத்தில் இருக்க முடியும் என்றால், அங்கு அவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? எதிர்ப்பாளர்கள் செல்லும் வழியில் அமர்ந்திருப்பதாக பாதுகாப்புப்படையினரிடம் கூறியதாகவும், பிரதமரேதான் திரும்பிச் செல்ல முடிவு செய்ததாகவும் சன்னி கூறினார்.

“இதில் பாதுகாப்பு பிரச்னை இல்லை. இனி வரும் காலங்களில் நல்ல ஏற்பாடு செய்வேன் . பிரதமர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

நடந்தது குளறுபடியா?

பிரதமர் ஃபெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக பிரதமர் போன்ற மிக, முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையின்போது எல்லா வித மாற்றுப்பாதைகளுக்கான திட்டம் முன்பே போடப்படும். அதற்கான ஒத்திகையையும் மாநில காவல்துறை செய்யும். அதை சிறப்புப் பாதுகாப்பு படையின் முன்பாதுகாப்பு ஆய்வுக் குழுவும் மேற்பார்வை செய்திருக்கும்.

அதன்படியே பிரதமர் சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டபோது, அதற்கான இசைவு மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபடுவார்கள் என்பது யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவமாக கருதப்படுகிறது.

மோதி அரசு

எனினும், பிரதமரின் வருகைக்கு எதிராக ஒரு சில விவசாயிகள் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பதுதான் களத்தில் இருந்த உண்மை.

ஃபெரோஸ்பூர் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹுசைனிவாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு 30 கிலோமீட்டர் முன்னதாகவே பிரதமரின் வாகன தொடரணி மேம்பாலத்தை அடைந்தது, அங்கு போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனாலேயே பிரதமரின் வாகனம் 15-20 நிமிடங்கள் அங்கேயே சிக்கிக் கொண்டது. அப்போது பிரதமர் இருந்த வாகனத்தை அவரது படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு கண்காணித்தனர்.

விவசாயிகள் சங்கம் என்ன சொல்கிறது?

இந்த சம்பவம் குறித்து கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகையில், மோதியை நிராகரித்த விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே மோதி தமது பேரணிய ரத்து செய்து விட்டு திரும்பியிருக்கிறார். அதை மறைக்கவே இப்படி நாடகமாடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மோதியின் பேரணியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையிலேயே கூட்டம் வந்ததாகவும் அதில் பங்கேற்றவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பிறகு 3 கேள்விகளை அம்மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் எழுப்புகிறார்.

பதிண்டாவில் இருந்து ஹெலிகாப்டருக்குப் பதிலாக சாலை மார்க்கமாக மோதி சென்று கொண்டிருக்கிறார் என்ற திட்டம் பஞ்சாப் காவல்துறை மட்டுமே தெரியும். அது எப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தரப்புக்கு தெரிய வந்தது என்று அவர் கேட்டுள்ளார்.

மோதியின் பாதையில் நின்ற விவசாயிகளை பஞ்சாப் காவல்துறை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தாதது ஏன்? மோதியின் பாதையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் நகரத் தயாராக இல்லை என்றால், பிரதமரின் பாதையை ஏன் மாற்றவில்லை? பஞ்சாப் மாநிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், “பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதை நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். மாநிலத்தை நடத்த தற்போதைய முதல்வர் திறமையற்றவர்,” என்று கூறியுள்ளார்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here