மோடியிடம் வேலை கேட்கும் இளைஞர்கள் -தொடர்ந்து டிரெண்டிங்கில் #modirojgardo; வேலைக்கு செல்லும் வயதில் உள்ள 4 கோடி பேருக்கு வேலை இல்லை

Staff Selection Commission announced CHSL 2019 results have inflicted a massive social media campaign against the Centre government for irregularities in the recruitments. A wing of students on Sunday came out demanding employment and transparency in the recruitments

0
220

கடந்த சில நாட்களாக டிவிட்டரில் #modirojgardo (மோடி வேலை வாய்ப்பு கொடுங்கள்) #modijobdo (மோடி வேலை கொடுங்கள்) என்கிற ஹேஷ்டேகுகளோடு நிறைய டிவிட்டுகள் பகிரப்பட்டன. பலரும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசிடம் வேலை கொடுக்குமாறு கோரினார்கள்.

எஸ்.எஸ்.சி என்றழைக்கப்படும் இந்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் சி.ஜி.எல்.டி என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுகளை நடத்தவில்லை என்பது இந்த டிரெண்டிங் ஹேஷ்டேகுக்கு பின்னால் இருக்கும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு.

அரசு அலுவலகங்களில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பதவிகளில் சேர, ஒவ்வோர் ஆண்டும் லட்சக் கணக்கிலான இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ரஞ்சித் ரகுநாத் என்கிற இளைஞர், கடந்த ஆண்டு விவசாயத் துறையில் தன் முதுகலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். தற்போது அரசின் விவசாயத் துறையில் ஒரு வேலையைப் பெற கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது 26, ஏற்கனவே அரசின் பணித் தேர்வுகளில் சலிப்படைந்து இருக்கிறார்.

“முதலில் அரசு போதுமான வேலை வாய்ப்புகளோடு வராது, அப்படியே வந்தாலும் அரசு முறையாக தேர்வுகளை நடத்தாது, அதை அரசு செய்தாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல சிக்கல்கள் எழும். நான் பல முறை விவசாயத் துறையின் தேர்வுகளை எழுதி இருக்கிறேன், இதுவரை ஒரு நியாயமான வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். தேர்வு முடிவுகளில் பல மோசடிகளும் நிகழ்கின்றன” என பிபிசியிடம் தொலைபேசி மூலம் கூறினார் ரஞ்சித்.

#mama_rojgar_do என்கிற ஹேஷ்டேகுடன் ட்விட்டும் செய்திருக்கிறார் ரஞ்சித். இதில் ‘மாமா’ எனக் குறிப்பிடுவது மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹானைத் தான். அம்மாநிலத்தில் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.

“உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் குழுவில் நானும் ஒருவன். ஒரு விவாதத்தைத் தொடங்க நாங்கள் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துகிறோம். இந்த பிரச்னை தொடர்பாக நாம் எதையாவது செய்ய வேண்டும்” என்கிறார் ரஞ்சித்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்

இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததும் இளைஞர்கள் வேலை தொடர்பாக இப்படி ட்வீட் செய்ய ஒரு முக்கிய காரணம்.

2021-ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் நான்கு கோடி பேருக்கு வேலை இல்லை என்கிறது சென்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி (சி,எம்.ஐ.இ) என்ற அமைப்பு. இதில் தொடர்ந்து வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலையைத் தேடாதவர்கள் என இரு தரப்பினரும் அடக்கம்.

இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மை 6.5 சதவீதம் ஆக இருக்கிறது. கடந்த 2020 டிசம்பரில் இது 9.1 சதவீதமாக இருந்தது.

சி.எம்.ஐ.இ அமைப்பின் தரவுகளின்படி, 2019 – 20 நிதி ஆண்டில், இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வேலையில் இருக்கிறார்கள். 3.5 கோடி பேருக்கு வேலை இல்லை.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் தோராயமாக இரண்டு கோடி பேர், வேலை பார்க்கத் தகுதியான 15 – 59 வயதில் இணைகிறார்கள்.

30 வயதான, மகாராஷ்டிர மாநிலத்தின் சிக்ஹல்தராவைச் சேர்ந்த பியுஷ் மால்வியா போன்றவர்கள் பல முறை வேலை தேடும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் , வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள்.

“நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை அரசியல் அறிவியலில் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவு செய்தேன். அதன் பின் அரசு வேலைக்காக பல முறை முயற்சித்தேன், வேலை கிடைக்கவில்லை. 2011-ம் ஆண்டு என் பி.எட் இளங்கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு ஆசிரியராக முயற்சித்தேன் அதுவும் நடக்கவில்லை” என்கிறார் பியுஷ்.

தற்போது பியுஷ் தன் தந்தையின் மொபைல் எலெக்ட்ரானிக்ஸ் தொழிலை ஏற்று நடத்தி வருகிறார். இவரும் மேலே குறிப்பிட்ட ஹேஷ்டேகுகளோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். வேலை இல்லாததைப் பற்றிப் பேச வேண்டும் என தான் நம்புவதாகவும் கூறினார்.

“ஒன்றுமே நடக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் அதைக் குறித்துப் பேசுகிறார்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் அதைக் குறித்துப் பேச வேண்டும். அதற்கு சமூக வலைதளம் ஒரு முக்கிய இடம்” என்கிறார் பியுஷ்.

இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுகிறது. எப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது.

இந்த நிலைக்குக் காரணம் பணமதிப்பிழப்புதான் என்கிறார் முன்னாள் முதன்மைப் புள்ளியியல் தலைவர் பிரனாப் சென்.

“இந்தியாவின் அமைப்புசாரா துறையை பணமதிப்பிழப்பு கடுமையாக பாதித்துவிட்டது. அதிலிருந்து நாம் மீண்டு கொண்டிருந்த போது கொரோனா வந்துவிட்டது. பிரச்னை பல மடங்கு அதிகரித்துவிட்டது” என்கிறார்

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு

அரசு தன் கொள்கை அளவில் வேலை தொடர்பான பிரச்னைகளை ஒரு பிரச்னை என்றே கருதவில்லை அல்லது எடுத்துக் கொள்ளவில்லை என சி.எம்.ஐ.இ அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் கூறுகிறார்.

“இந்தியாவின் வளர்ச்சி தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் துறை மூலம் முன்னெடுக்கப்படாமல், முதலீடு அதிகம் தேவைப்படும் துறை மூலம் முன்னெடுக்கப்பட்டது. அரசு போதுமான தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கிறது. பொருளாதாரம் எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். ஆனால் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை- 2021 அதைக் குறித்துப் பேசவே இல்லை” என்கிறார் மகேஷ் வியாஸ்.

இந்தியாவின் கிராமப் புறங்களை விட, நகர் புறங்களில் வேலையின்மை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதாக சி.எம்.ஐ.இ-யின் தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2021 ஜனவரியில் நகர் புறத்தில் வேலையின்மை 8 சதவீதமாகவும், கிராம புறத்தில் 5.8 சதவீதமாகவும் இருக்கிறது.

இந்த வேலையின்மை பிரச்னையைச் சமாளிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போல ஒரு மாதிரியை நகர் புறத்துக்குக் கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், கிராமப் புறத்தில் இருக்கும் ஒருவருக்கு, ஒரு நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்படுகிறது. ஒருவர் இத்திட்டத்தின் கீழ் வேலைக்கு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் வேலை கொடுக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கான வேலையின்மை படி (Unemployment Allowance) வழங்கப்படும்.

“இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதை காலம்தான் கூறும்” என்கிறார் பிரனாப் சென்.

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என மகேஷ் வியாஸிடம் கேட்டோம். அதற்கு பிரச்னையை பிரச்னை என அங்கீகரிப்பதில் இருந்து தொடங்குவோம் என்றார்.

“முதலில் அரசு வேலை வாய்ப்பு இல்லாததை ஒரு பிரச்னையாக அங்கீகரிக்க வேண்டும் அதன் பிறகு கொள்கைகளைக் கொண்டு வரலாம்” என்கிறார் மகேஷ் வியாஸ்.

“மத்திய அரசு அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் கொண்டு வரும் அழுத்தத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்” என மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்ஜீவ் சன்யால் பிபிசியின் நேர்காணலில் தெரிவித்தார்.

https://www.bbc.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here