(இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால்பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இன்று மூன்றாம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி வெளியிடப்படும் செய்திக் கட்டுரை.)

“2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சரிந்த வருமானம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுகூட சரியாகவில்லை. நடுத்தர வசதிகொண்ட குடும்பமாக நான் மாற 50 ஆண்டுகள் உழைத்தேன். என் வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் இந்த நாட்களில் மீண்டும் ஏழ்மை நிலைக்கு போய்விடுவேனோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

பெருங்குடி பகுதியில் மளிகை கடை நடத்தும் 67 வயது சண்முகம் எத்திராஜனின் நம்பிக்கையற்ற குரல்தான் இது. மளிகை கடையில் ஈட்டும் வருமானத்தில் தனது குடும்பத்திற்கான செலவுகள் மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவியும் செய்துவந்தார் சண்முகம்.

”இரண்டு மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.50,000 வீதம் கல்வி உதவி அளித்துவந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவனுக்கு மட்டுமே என்னால் செலவு செய்யமுடிகிறது. அதற்கு கூட என அத்தியாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சேர்த்த பணத்தில் அந்த மாணவனை படிக்கவைக்கிறேன். நான்கு கோயில்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் கொடுத்துவந்தேன். தற்போது இரண்டு கோயில்களுக்கு மட்டுமே தரமுடிகிறது. என் சமூக சேவைகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,” என சோகத்தோடு பேசுகிறார் சண்முகம்.

”வியாபாரிகளின் நம்பிக்கையை குலைத்துவிட்டது”

பரபரப்பான சென்னை நகரத்தில் அன்றாட வாழ்க்கைக்காக உழைக்கும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளில் ஒருவர்தான் சண்முகம். ”தினமும் ரூ.25,000 மதிப்புள்ள பொருட்களை விற்ற இடத்தில் தற்போது வெறும் ரூ.10,000 மதிப்புள்ள பொருட்களைத்தான் விற்கமுடிகிறது. பணமதிப்பிழப்போடு, ஜிஎஸ்டி வரியும் சேர்ந்துள்ளதால், எனக்கு கிடைக்கும் லாபம் பன்மடங்கு குறைந்துவிட்டது. என் குடும்பசெலவுக்கு பணம் சேர்ப்பதே சிக்கலாகிவிட்டது. யாருக்கும் உதவுவதாக வாக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டேன்,”என்கிறார் சண்முகம்.

இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சண்முகம் போன்ற சிறு,குறு வியாபாரிகள் பலரின் வாழ்க்கை முற்றிலுமாக புரட்டி போட்டுவிட்டது என்பதில் வேறுகருத்து இருக்க முடியாது என உறுதியாக கூறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

படிப்பு இல்லாவிட்டாலும், அதிகமாக முதலீடு செய்ய பணம் இல்லாவிட்டாலும் ஒரு மளிகை கடை நடத்தி பிழைக்க முடியும் என இதுநாள் வரை பல ஏழை மக்கள் நம்பியிருந்தார்கள். அந்த தன்னம்பிக்கையை பணமதிப்பிழப்பு குலைத்துவிட்டது என்கிறார் விக்கிரமராஜா.”அரசு வேலையை எதிர்பார்க்காமல், சொந்த காலில் நிற்க போராடி வாழும் பல சிறு,குறு வியாபாரிகள் இந்த பணமதிப்பிழப்பால் அவதிப்பட்டார்கள். அவர்கள் நஷ்டத்தில் இருந்து மீளமுடியவில்லை. ரொக்க பரிமாற்றத்தை முடக்கி, டிஜிட்டல் ரீதியாக செலவு செய்யும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை. இந்த அடிப்படை புரிதல் இல்லாமல், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திடீரென தடை செய்தார்கள். லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது. பணமதிப்பிழப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. டெபிட், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இரண்டரை சதவீதம் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு சிறு வியாபாரி விற்பனை செய்வதில் இரண்டு முதல் ஐந்து சதவீதம்தான் லாபம் கிடைக்கும், அதனை டிஜிட்டல் பரிவர்த்தனையில் இழந்துவிட்டு என்ன தொழில் செய்யமுடியும்,” என கேள்வி எழுப்புகிறார் அவர்.

பணமதிப்பிழப்பால் சிறு,குறு வியாபாரத்திற்கு என்ன தாக்கம் ஏற்பட்டது என அரசு சார்பாக அதிகாரபூர்வ எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என 2019ல் ஜூலை மாதம் மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சிறு வியாபாரிகள் நட்டத்தில் இருந்து மீள்வது எப்போது?

சிறு,குறு வியாபாரிகள் சந்தித்த நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும், அவர்களின் இழப்பை எந்த வகையில் சரிசெய்ய முடியும் என பொருளாதாரநிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

”சிறு வியாபாரிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வது சிரமம். எந்த காலக்கெடுவும் சொல்லமுடியாது. ஏனெனில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் இரண்டு மாதங்கள் கடுமையான வீழ்ச்சியை ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் சந்தித்தது. அந்த இரண்டு மாத காலம் சிறு வியாபாரிகள் வாங்கிய கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. அவர்கள் கடன் பெற்று வியாபாரம் செய்தார்கள். அதனை அடைக்கும் முன்னர் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை மோசமாக பாதித்துவிட்டது. இந்த இரண்டு காரணங்களால், வாங்கிய கடனை உடனே கட்டுவதா, தங்களது செலவுகளுக்கு பணத்தை சேர்ப்பதா என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்,”என்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

”வங்கிகளில் கடன் வாங்குவதை விட பெரும்பாலான சிறு வணிகர்கள் தினசரி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் பணம் பெற்று தொழில் செய்வார்கள். பணமதிப்பிழப்பு காலத்தில் வட்டியை கட்டமுடியாமல், மேலும் கடன் வாங்கியிருப்பார்கள். இந்த சூழலில் இருந்து அவர்கள் மீள்வது சிரமம்தான்,”என்கிறார் அவர்.இந்திய அரசு ஜிஎஸ்டி கூட்டம் நடத்தி, வரிவிதிப்புகளை குறைப்பது குறித்து கேட்டபோது, ”வரிவிலக்கு பெரிய முதலாளிகளுக்கு, அதிலும் மளிகை போன்ற வியாபாரங்களை மேலும் ஒரு தொழிலாக செய்பவர்களுக்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது. சிறு வியாபாரிகள் ஒரு தொழிலை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் அளவுக்கு வரி இருந்ததால், கடை நடத்தி, லாபம் ஈட்டமுடியாது,”என்கிறார் அவர்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் சிறு குறு வியாபாரிகள் சந்தித்த பாதிப்பை சரிப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டோம்.”40 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வபவர்களுக்கு வரிவிலக்கு உள்ளது. சிறுகுறு வியாபாரிகள் பெரும்பாலும் ரூ. 40 லட்சத்திற்கு கீழ் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதுமட்டுல்ல, ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும்போது ஒவ்வொரு பொருளுக்கும் விதிக்கப்பட்ட வரிகளை குறிப்பிட்டு, வரி குறைப்புக்காக பேசி, குறைத்துள்ளோம். சுயதொழில் செய்பவர்கள், எடுத்துக்காட்டாக, கிரைண்டர், பார்லர் நடத்துபவர்கள், பொறியியல் வேலை, உணவகம் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில், ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் பேசி வரியை குறைத்துள்ளோம்,” என்றார் ஜெயக்குமார்.

தொழில் முனைவோர் மற்றும் சிறுவியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்த்துவருவதாக கூறிய அமைச்சர் 28 சதவீத வரி விதிக்கப்பட்ட பல பொருட்களுக்கு வெறும் ஐந்து சதவீத வரியாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து வரிகுறைப்புக்காக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here