‘ஐரா’, ‘மிஸ்டர்லோக்கல்’, ‘கொலையுதிர்காலம்’ ஆகிய படங்களின் தொடர்  தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் நயன்தாரா.

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை ‘அவள்’  இயக்குநர் மிலந்த் ராவ் இயக்குகிறார்.

2017ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’  படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சித்தார்த் இத்திரைப்படத்தைத் தயாரித்தார்.  அதனைத் தொடர்ந்து ‘அவள் 2’ படத்தின் பணிகளைக் கவனித்து இயக்குநர் மிலந்த் ராவ்  வந்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார்.  இதன் கதையைக் கேட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனே இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதன் முதற்கட்டப் பணிகளான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மற்றும் இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுஇந்தப் படத்தின் படப்பிடிப்பைச் செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.