”நம் அன்பு கட்டப்பட்டு விட்டன. உணர்வுகள் இரண்டாம் பட்சமாகி விட்டன”: ரோஹித் வெமுலாவின் உருக்கும் மரண எழுத்துக்கள்

0
398

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ரோஹித் வெமுலா கடைசியாக எழுதிய கடிதம்.

“குட் மார்னிங்,

நீங்கள் இந்தக் கடிதத்தை படிக்கும் பொழுது நான் உங்களுடன் இருக்க மாட்டேன். எனக்காக பலர் அக்கறையுடன் இருந்தீர்கள், என்னை தாங்கினீர்கள், என்னை விரும்பினீர்கள் என்பது எனக்கு தெரியும். யார் மீதும் எனக்கு குறை இல்லை. என்னிடம் தான் பல பிரச்சனைகள் இருந்துள்ளன. என் உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்துக் கொண்டே போவதை நான் காண்கிறேன். நான் ஒரு அசுரன் போல் மாறிவிட்டேன். ஒரு எழுத்தாளராகத்தான் நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன். கார்ல் சாகன் போல் அறிவியலை எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால், என்னால் எழுத முடிந்தது இந்த கடிதத்தை மட்டுமே.

எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கையை பிடிக்கும். இயற்கையுடன் வெகு நாட்களுக்கு முன்னரே தொடர்பை துண்டித்துக் கொண்டவர்களுடனும் நான் பழகியிருக்கிறேன். நம்முடைய உணர்வுகள் இரண்டாம் பட்சமாக மாறிவிட்டன. நம்முடைய அன்பு கட்டப்பட்டு விட்டன. நம்முடைய நம்பிக்கைகளின் மேல் சாயம் பூசப்பட்டு விட்டன. செயற்கையான கலைகள் மூலமாகத்தான் நம்முடைய உண்மையான செயல்கள் மதிக்கப்படுகின்றன. வலியில்லாமல் காதலை பெறுவது அரிதாகி விட்டது.

உடனடியாக அடையாளமும் வாய்ப்பும் கிடைப்பதற்காக நம்முடைய குணங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஓட்டுக்களுக்காக, எண்களுக்காக, பொருள்களுக்காக, மனிதன் மனிதனாக பார்க்கப்படுவதில்லை. எல்லா துறைகளிலும், கல்வி பிரிவுகளிலும், தெருக்களிலும், அரசியலிலும், வாழ்தலிலும், சாதலிலும் இப்படித்தான் நிகழ்கின்றன.

இப்படியொரு கடிதத்தை நான் முதல்முறையாக எழுதுகிறேன். முதல்முறையாக என்னுடைய கடைசி கடிதத்தைதான் நான் எழுதுகிறேன். நான் உங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகத்தை புரிந்துக் கொள்வதில் நான் தவறு செய்திருக்கலாம். காதல், வலி, வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றை புரிந்து கொள்வதில் கூட நான் தவறு இழைத்திருக்கலாம். எந்தவொரு அவசரமும் இல்லை. ஆனால், எனக்கு அவசரம் ஏற்பட்டுள்ளது. கடினப்பட்டு வாழ்க்கையை பயணிக்க முடியவில்லை. நிறைய பேருக்கு வாழ்க்கை சாபமாகத்தான் இருந்துள்ளது. என் வாழ்க்கை ஒரு அபாயகரமான விபத்து. என் குழந்தை கால தனிமை வாழ்க்கையை என்னால் திரும்பி மீட்க இயலாது. ஊக்கப்படுத்த முடியாத ஒரு குழந்தையாக நான் இருந்துள்ளேன்.

நான் இந்த தருணத்தில் யாரையும் காயப்படுத்த முடியவில்லை. நான் வருத்தமாக இல்லை. நான் வெற்றிடமாக உள்ளேன். என்னைப்பற்றி நான் நினைக்கவில்லை. அதுதான் பரிதாபமாக உள்ளது. அதனால்தான் நான் இதை செய்கிறேன்.

மக்கள் என்னை கோழை என நினைக்கலாம். நான் போனபின்பு என்னை முட்டாள், சுயநலவாதி என கூட நினைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. பேய், பிசாசு ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நட்சத்திரங்களுக்கிடையில் பயணிப்பேன் என்பதில் மட்டும் எனக்கு நம்பிக்கை உண்டு. மற்ற உலகங்களை பற்றியும் எனக்கு தெரியும்.

எனக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இதை மட்டும் செய்யுங்கள். எனக்கு 7 மாத உதவித்தொகையாக 1,75,000 வர வேண்டும். அதை மட்டும் என் குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்து விடுங்கள். ராம்ஜிக்கு 40,000 தர வேண்டும். அவர் எப்பொழுதும் அதைத் திருப்பிக் கேட்டதில்லை. ஆனால், தயவு செய்து அதையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

என்னுடைய இறுதிச்சடங்கு சுமூகமாக, அமைதியாக நடக்கட்டும். நான் தோன்றி மறைந்துவிட்டேன் என நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் வடிக்காதீர்கள். நான் வாழ்வதை விட சாவதில் சந்தோஷம் அடைகிறேன்.

‘நிழலில் இருந்து நட்சத்திரங்கள் வரை’

உங்கள் அறையை இதற்காக பயன்படுத்துவதற்கு என்னை மன்னித்து விடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மானவர் சங்கம் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அனைவரும் என்னை விரும்பினீர்கள். உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். உங்கள் வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

கடைசியாக ஒருமுறை,

ஜெய்பீம்.

வழக்கமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் சொல்வதை எழுத மறந்து விட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரும் அவ்ர்களுடைய வார்த்தைகளாலோ, செயல்களினாலோ, இந்த செயலை செய்யும்படி என்னைத் தூண்டவில்லை. இது என் முடிவு. நான்தான் இதற்கு காரணம். இந்த சம்பவத்திற்கு பின் என் நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எந்த தொந்தரவையும் தர வேண்டாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்