’நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்’

0
65

குதிரை பேரத்தின் அடிப்படையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, இந்த ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டி ராஜ்பவனில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்காளிடம் பேசிய ஸ்டாலின் ”கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் கோரிக்கை வைத்தோம். ஆனால், சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. வாக்கெடுப்புக்கு குதிரை பேரம் நடந்திருக்கிறது. எனவே, சுயமாக சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்றால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், அவைக்குள் காவல்துறையினரை வரவழைத்து எங்களை எல்லாம் அடித்து, துன்புறுத்தி குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வந்து வெளியில் போட்டதெல்லாம் நாட்டுக்கு நன்றாகவே தெரியும்.

இதையும் படியுங்கள் : வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் – ட்விட்டரில் தன்னை விமர்சித்த கஸ்தூரியை சந்தித்த ரஜினி

அன்றைய தினமே தமிழக பொறுப்பு ஆளுநர் மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்களை நாங்கள் நேரில் சந்தித்து, குதிரை பேரத்தின் அடிப்படையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி இருக்கிறார்கள் என்று அப்போதே புகார் தெரிவித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. இன்றைக்கு குதிரை பேரத்தினால் இந்த ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நடக்கிறது என்பதை ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கில தொலைக்காட்சி உறுதிபடுத்தி இருக்கிறது. திரு. சரவணன், திரு. கனகராஜ் ஆகிய இரு அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்களே தெளிவாக பேட்டி தந்திருக்கிறார்கள். அவையெல்லாம் தொலைக்காட்சியில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள் : அவசரகால முதலுதவிக்கான பயிற்சி ஏன் அனைவருக்கும் தேவை?

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து 3 நாட்களாக எதிர்க்கட்சிகளின் சார்பில் அந்தப் பிரச்னையை எழுப்பினோம். ஆனால், சபாநாயகர் அதற்கு சம்மதிக்கவில்லை. இரண்டு தினங்கள், “ஆதாரத்தை கொடுத்து விட்டு பேச வேண்டும்”, என்று சபாநாயகர் தெரிவித்தார். நேற்றைய தினம் ’டைம்ஸ் நவ்’ டிவியில் வெளியான ஆதாரத்தை எடுத்துச் சென்று அவரிடம் தருவதாக சொன்னபோது, “இதையெல்லாம் அவையில் தரக்கூடாது, என்னுடைய அறையில் தான் தர வேண்டும்”, என்றார். அதையும் ஏற்று நேற்றைய தினம் அந்த ஆதாரத்தை அவரது அறைக்குக் கொண்டு சென்று தந்துவிட்டு வந்திருக்கிறோம். ஆனாலும் அதனை ஏற்றுக் கொண்டு, நாளை மறுநாள் விவாதத்திற்கு ஏற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இதுபற்றி நாங்கள் பேசுவோம்.

இதையும் படியுங்கள் : லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க

இதற்கிடையில், தமிழக ஆளுநர் மாண்புமிகு வித்யாசாகர ராவ் அவர்களை சந்தித்து நடந்தவற்றை எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வந்த ஆதாரத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும், அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றி பெற்று இருப்பது உறுதியாகி இருப்பதால், அந்த வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, இந்த ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும், என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். மாண்புமிகு ஆளுநர் அவர்கள், சட்டரீதியாக ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களிடத்தில் உறுதியளித்துள்ளார்.” என்றார்.

இதையும் படியுங்கள் : சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் கார்த்திக்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்