கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணிப்போம் என 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

அவர் பதவி ஏற்று 13 மாதங்களில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா தன்பக்கம் இழுத்துள்ளது. அவர்களில் 16 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.

அவர் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா வலியுறுத்தி வந்தார். அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் முயற்சித்தார்.

இந்த நிலையில் குமாரசாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்தார். வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

எனவே 18-ந்தேதி இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் குமாரசாமி ஆட்சி கவிழ்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

மாநிலத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 224. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 79 பேரும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 பேரும் இருந்தனர். ஒரே ஒரு எம்.எல்.ஏ. கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஆளும் கட்சிக்கு மொத்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எண்ணிக்கை 117 ஆக இருந்து வந்தது. மேலும் 2 சுயேச்சைகளும் ஆதரித்து வந்தனர். இதன் மூலம் 119 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசிடம் இருந்தனர். பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

இப்போது 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பாரதிய ஜனதா பக்கம் தாவி விட்டனர்.

இதன் காரணமாக தற்போது ஆளும் கட்சியின் பலம் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வோடு சேர்த்து 117 ஆக உள்ளது. அதில் காங்கிரசை சேர்ந்த 13 பேரும், ஜனதா தளத்தை சேர்ந்த 3 பேரும் என மொத்தம் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அந்த ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தற்போதைய நிலையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் 16 பேர் எதிர் அணிக்கு தாவிவிட்டதால் அந்த அளவிற்கு அரசுக்கு பலம் இல்லை. 101 பேர் மட்டும் தான் அவர்களுடன் இருக்கிறார்கள். எனவே ஆட்சியை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது.

எப்படியாவது 16 எம்.எல்.ஏ.க்களையும் சமரசப்படுத்திவிடலாம் என்று காங்கிரஸ் – ஜனதா தளம் கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் அவர்கள் மும்பையில் உள்ள ஓட்டலில் பாரதிய ஜனதா பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இதுவரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இனிமேலும் சமரசப்படுத்த முடியும் என்ற நிலை இல்லை.

18-ந்தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும்போது 16 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காமல் மும்பையிலேயே தங்கிவிட முடிவு செய்துள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் கூறும்போது, நாங்கள் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டோம். இதன்படி நாங்கள் இப்போது எம்.எல்.ஏ. பதவியில் இல்லை. எனவே சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்க முடியாது என்று கூறினார்கள்.

16 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை என்றால் ஆளும் கட்சியின் பலம் 101 ஆகத்தான் இருக்கும். மெஜாரிட்டியை நிரூபிக்க 113 பேர் தேவை என்பதால் குமாரசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் மூலம் குமாரசாமியின் அரசு 18-ந்தேதி கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 105 எம்.எல்.ஏ.க் கள் இருக்கும் பாரதிய ஜனதாவுக்கு 2 சுயேச்சைகள் ஆதரவு அளித்து இருப்பதால் அதன் எண்ணிக்கை 107 ஆக உள்ளது.

ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏ.க்களை கழித்து விட்டால் சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 208 ஆக இருக்கும். இதன்படி மெஜாரிட்டிக்கு 105 எம்.எல்.ஏ.க்களே தேவை. அதைவிட கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு இருப்பதால் அந்த கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். ஆட்சி கவிழும் நிலை உருவாகி இருப்பதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மேலும் பலர் எதிர்முனைக்கு தாவும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே மும்பையில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், காங்கிரஸ் தலைவர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் யாரையும் சந்திக்க விரும்ப வில்லை. எனவே எங்களை சந்திப்பதற்கு அவர்களை அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கியுள்ள ஓட்டல் பகுதியில் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here