”கூவம் நதியை சீரமைக்க திட்டம்.தமிழக அரசு ரூ.605 கோடி ஒதுக்கியது”. -தினத்தந்தி 19.09.2015

”சுகாதார பணியில் சுணக்கம் காரணமாக: மறுகுடியமர்வு பகுதிகளில் வேகமாக பரவும் காசநோய்., அதிர்ச்சி தகவல் அம்பலம்” -தினகரன் 18.09.2015

நதியைச் சீரமைக்க 605 கோடி, நதிக்கரையிலிருந்து துரத்தப்பட்ட சேரி மக்களுக்கு காசநோயி., ஒன்றரை இலட்சம் மக்கள அடைச்சிருக்குற கண்ணகிநகரில் ஒரு ஆஸ்பிட்டல் கட்ட துப்பில்ல.. உங்களுக்கெல்லாம் எதுக்கு நதியும், நாகரீகமும்..?

கருணாநிதியும் இப்படித்தான் பூங்கா போடுறேன்னு எங்க குடிசையெல்லாம் கொளுத்துனாரு.எங்கள கண்ணகிநகருக்கும், செம்மஞ்சேரிக்கும் தொரத்துனாரு.,இப்போ அந்தப் பூங்கால்லாம் கருணாநிதி கட்சி மாதிரி காத்து வாங்கிக்கினு இருக்கு. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்காக கூவம் நதிக்கரையில இருந்த மக்கள காலி பண்ண வுடமாட்டேன்னு, எங்களோட சேர்ந்து மல்லுக்கட்டி நின்னுதான் ஓட்டு வாங்கி ஜெயிச்சீங்க.

சென்னையில 16 அசம்பளி தொகுதியில, 14லுல ஜெயிக்கவெச்சி வுங்கள கோட்டைக்கு அனுப்புனோம். இப்ப இன்னாடான்னா, ஒலக முதலீட்டாளர் கண்ண உறுத்தும்ன்னு, அயோத்திக்குப்பம்,நடுக்குப்பம்,பாரிஸ்கார்னரு,அயனாவரம்,கோவிந்தசாமி நகர், பட்டினப்பாக்கம்,ஜாபர்கான்பேட்டன்னு,மிச்சம் மீதியிருக்குற சென்னையோட பூர்வகுடி மக்கள சென்னையவுட்டு தொரத்துறீங்க. உங்கள ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சது தப்பா ஜெயலலிதா அம்மா..?

நான் எழுதிய பாடல்

சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல…
சிங்கார சென்னை யாருக்கு தெரியல
சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல…
எழில்மிகு சென்னை யாருக்கு தெரியல
தெரிஞ்சுக்க யாரும் இங்க விரும்பல..- அவுங்க
சென்னையில் வசிக்கிற தெம்புல..
(சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல)

பறக்கும் ரயிலு, ஏஸி பஸ் பாரம்மா..- அது
காசுக்கார கூட்டத்துக்கு சொகுசுதானம்மா – அய்யோ
பறக்கும் ரயிலு, மெட்ரோ ரயிலு பாரம்மா- அது
காசுக்கார கூட்டத்துக்கு சோக்குதானம்மா- நம்ம
உழைப்பாளி மக்களுக்கு பஸ்ஸு ஏதம்மா..ம்மாஆஆ
அதோ வர்ர பஸ்ஸும் டீலக்ஸ்ஸாவே இருப்பதேனம்மா..?
(சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல)

கண்ணகி நகரு,செம்மஞ்சேரி தெரியுமா..-அது
குடிச மக்கள அடைச்சிருக்கும் காடுதானம்மா..
பெரும்பாக்கம், கன்னடப்பாளையம் தெரியுமா -அது
சேரி மக்கள அடைச்சிருக்கும் காடுதானம்மா.. -அங்க
குடிக்கத் தண்ணி,படிக்க பள்ளிக் கூடமில்லீங்க -உசுர
காப்பாத்த ஆஸ்ஸுபத்திரி ஏதுமில்லீங்க…?
(சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல)

அக்கிரகாரம், அவாளலெள்ளாம் சென்னையில-அவாளுக்கு
அடுத்ததாக உள்ளவனும் சென்னையில
அடுக்கடுக்கா அப்பார்ட்மென்ட்டு சென்னையில- அதுல
அட்ரசே இல்லாதவன் சென்னையில
ஒடம்ப நம்பி, ஒழப்ப நம்பி நாம வாழுறோம்..-நம்ம
ஒழப்பினால இந்த சென்னைய ஒசத்தி இருக்குறோம்.-இருந்தும்
ஒன்னா சேர்ந்து போராடாம தாழ்ந்து கெடக்குறோம்- ஏன்
தாழ்ந்து கெடக்குறோம்?
(சென்னையில வசிக்க நமக்கு எடமில்ல)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here