நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மோடி பிரச்சாரம் செய்த 70 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் 70 சதவீததத்துக்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்துள்ளதாக தேர்தல் தரவுகளை ஆய்வு செய்த இந்தியா ஸ்பென்ட் தெரிவித்துள்ளது.

80 தொகுதிகளில் 30 இடங்களில் மோடி பிரச்சாரம் செய்தார். இதில் பாஜக 23 இடங்களில் வெற்றி பெற்று 57 இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது .

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக 54 இடங்களில் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு இடங்களிலும் மோடி 22 முறை பிரச்சாரம் செய்துள்ளார். அதாவது பிரச்சாரத்திற்காக மோடி அதிக நேரம் செலவிட்ட இடங்கள் மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும்தான்.

சட்டீஸ்கர், தெலங்கானா , மிசோரம் ஆகிய இடங்களில் 26 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இவ்விடங்களில் மோடி 8 முறை பிரச்சாரம் செய்துள்ளார் .

மோடியை விட யோகி ஆதித்யாநாத் திறமையாக பிரச்சாரம் செய்பவரா?

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடியை விட சிறப்பாக பிரச்சாரம் செய்பவர் என்று லைவ்மின்ட் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த 4 மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் 58 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இங்கு பாஜக 27 இடங்களில் வெற்றி பெற்று , 42 இடங்களில் தோல்வியடைந்துள்ளது.

அதாவது மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக அடைந்த வெற்றி 28.75 சதவீதம். யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக அடைந்த வெற்றி 39.13 சதவீதம் .

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யோகி ஆதித்யநாத் 27 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இதில் 37 தொகுதிகளில் 21 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

சட்டீஸ்கரில் , பாஜக போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு யோகி ஆதித்யநாத் 23 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

Courtesy : The Wire