ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப குற்றவியல் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அல்லிக்குளம் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதித்துறை நடுவர் முன் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதத்தில், 124 பிரிவு சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்த வகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றும் கட்டுரை மூலம் ஆளுநர் பணியில் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதம் செய்தார். அதேபோல் ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை. இத்தகைய வழக்குகளில் கைது செய்வது என்பது தவறான முன்னுதாரணம் ஆகி விடும். இந்த வழக்கிற்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை.

ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது ஏன் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். இந்தப் பிரிவில் கைது செய்ய முகாந்திரமே இல்லை என வாதிட்டார்.

‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் ஊடகத் தரப்பில் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத் பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என மறுத்தார். இதனையடுத்து நீதிபதி கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது என்று கூறினார்

புனே செல்வதற்காக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமானநிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் கைது செய்தார். மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் ஆசிரியருமான கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது .

ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோபால், காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது ஆளுநரின் தனிச்செயலாளர் அளித்த புகாரின் பேரில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்