தோண்டத் தோண்ட மண்டை ஓடுகள். இன்னும் எத்தனை நரபலிகள்?

0
403

செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியே தொடங்கிவிட்டது நரபலி வேட்டை. முதலில் நான்கு எலும்புக்கூடுகள். அப்புறம் நான்கு எலும்புக்கூடுகள். பி.ஆர்.பி. குவாரியின் டிரைவர் சேவற்கொடியோன் புகார் அளித்ததிலிருந்து மதுரை கீழவளவு சின்னமலம்பட்டியில் பதற்றம்தான். மலைகளையும், குவாரிகளையும் தேடிய சகாயம் மண்டை ஓடுகளைத் தேட ஆரம்பித்தார். சுடுகாட்டில் விடியவிடிய கண்முழித்தார். சேவற்கொடியோனுக்கு பி.ஆர்.பி. நிறுவனத்திலிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்போதுதான் சேவற்கொடியோனுக்கு இரண்டு போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். இப்போது மீண்டும் ஒரு புகார். அன்னக்கொடி என்ற 70 வயது மூதாட்டியும் நரபலி செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அன்னக்கொடியின் மகள் வீரம்மாள் புகார் அளித்தார்.

வியாழக்கிழமைக் கண்டெடுக்கப்பட்ட அன்னக்கொடியின் மண்டைஓடு
வியாழக்கிழமைக் கண்டெடுக்கப்பட்ட அன்னக்கொடியின் மண்டைஓடு

“என்னோட அம்மா அன்னக்கொடி 2010இல் காணாமப் போயிட்டாங்க. அப்ப நாங்க புகார் கொடுக்கல. இரண்டு வருஷமா நாங்களே தேடிப்பாத்தோம். கிடைக்கல. அதுக்கப்புறம் கண்மாய்க்கு அருகே விறகு வெட்டுனவுங்க பி.ஆர்.பி.ல எலும்புக்கூட பாத்துருக்காங்க. அவங்களுக்கு என்கிட்ட சொல்றதுக்கு தயக்கம். ரொம்ப கேட்டோனத்தான் என்னக் கூப்புட்டு போய்க் காண்பிச்சாங்க”, என்று வீரம்மாள் நடந்ததைக் கூறினார்.

விறகு வெட்டுபவர்கள் அந்த எலும்புக்கூடுகள் இருந்த இடத்திற்கு வீரம்மாளை அழைத்துச் சென்றனர். அங்கு அன்னக்கொடியின் பச்சை சேலை, அவரது மூக்குக்கண்ணாடி, மஞ்சப்பையில் 300 ரூபாய் ஆகியவை இருந்தன. மேலும் அவருடைய கண் மருந்து, பல் பொடி ஆகியவையும் இருந்திருக்கின்றன.

“நாங்க இதெல்லாம் பார்த்தவுடனேயே காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டோம். இந்த மரணத்தில் சந்தேகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று எங்களிடம் போலீசார் கேட்டனர். அப்பொழுது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று வீரம்மாள் கூறுகிறார். இதற்குப் பிறகுதான் தொலைக்காட்சிகளில் சகாயம் அவர்களது விசாரணை, மற்றும் எலும்புக்கூடுகளைப் பார்த்து மீண்டும் வீரம்மாள் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

இவர் புகார் கொடுத்ததும் மேலூர் தாசில்தார், போலீசார் மற்றும் கிரானைட் வழக்கின் அரசு வழக்கறிஞர் ஞானகிரி சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு அன்னக்கொடியின் பொருள்கள் மற்றும் எலும்புத்துண்டுகளை டி.என்.ஏ. சோதனைக்காக கைப்பற்றினர்.

”நரபலி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயருமா என்று தெரியவில்லை. உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” என்று சேவற்கொடியோன் கூறினார். தற்போது நான்கு நாட்களாக இது பற்றிய விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

பி.ஆர்.பி.பழனிச்சாமி மீது புகார் அளித்த சேவற்கொடியோன்.
பி.ஆர்.பி.பழனிச்சாமி மீது புகார் அளித்த சேவற்கொடியோன்.

ஏற்கனவே நரபலி செய்யப்பட்ட அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இப்பொழுது ஒரு மூதாட்டி. இதில் ஒரு குழந்தையும் அடங்கும். இதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பி.ஆர்.பி.பழனிச்சாமி, “சகாயம் புகழ் அடைய எங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்”, என்று கூறியிருக்கிறார். எது எப்படியிருந்தாலும் அப்பாவி மக்களைத் தங்களுடைய பேராசைக்காக இப்படி முட்டாள்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக ‘நரபலி’ கொடுத்தவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.

ஆரம்பத்தில் சகாயம் சுடுகாட்டில் படுத்து உறங்கியதைப் படம் எடுத்து அவரைப்பற்றிப் பேசிய ஊடகங்கள் அடுத்தடுத்து அதைப் பேசத் தயங்குகின்றன. எது எப்படி இருந்தாலும் 15ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரானைட் கொள்ளை பற்றி சட்ட ஆணையர் சகாயம் அளிக்கப்போகும் அறிக்கையில் உண்மைகள் வெளியில் வரும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்