ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் அரசு நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை, தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்த்தது மத்திய அரசு. அரசு நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கி இருந்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

மோடியின் ஆட்சியில் 15 முதல் 20 தொழிலதிபர்கள் மட்டுமே பலன் பெற்றுவருகிறார்கள். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டோம் ஆனால், இதுவரை ஒருவார்த்தை கூட மோடி பேசவில்லை.

மோடியின் ஆட்சியில் நிரவ்மோடி, மெகுல் சோக்ஸி, லலித் மோடி, அனில் அம்பானி ஆகியோர் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் , விவசாயிகள் குறித்தும், இளைஞர்கள் குறித்தும் எந்த விதமான கவலையும் மோடிக்கு இல்லை.

விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயிகள் கடனை நாங்கள் ரத்து செய்தோம். 3.5 லட்சம் கோடி ரூபாய் இனி வங்கிக்கு வராது என்று பாஜக அரசு கூறியுள்ளது. ஆனால் விவசாயிகளின் கடன் 1 ரூபாய் கூட ரத்து செய்யப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. நடவடிக்கையும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டன. ஜி.எஸ்.டி. என்று சொல்வதை விட கப்பார் சிங் டேக்ஸ் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும், அதற்காகத் தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்து அமையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏழைகளுக்காகவும், சிறு, குறு வர்த்தகர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், இளைஞர்களுக்காகவும், கட்சியினருக்காகவும் உழைக்கும் அரசாக இருக்கும்.

கடந்த முறை தொழிலாளர்கள், மக்கள் விடுத்த கோரிக்கையை அமைச்சர்கள் செவிகொடுத்து கேட்கவில்லை, அதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இந்த முறை காங்கிரஸ் சார்பில் வரும் முதல்வர், அமைச்சர்கள் மக்களுக்காக எப்போதும் தங்கள் கதவுகளைத் திறந்துவைத்திருப்பார்கள். அவர்களுக்காக உழைப்பார்கள்.

பெண் குழந்தைகளை காப்போம் என்று பிரதமர் மோடி முழக்கமிடுகிறார். ஆனால், பாஜக எம்எல்ஏ ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணைப் பலாத்காரம் செய்கிறார். பெண்களை அவர்களிடம் இருந்து பிரதமரும், முதல்வர் காப்பாற்ற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் தொலைக்காட்சி சேனல்களில் தோன்றுகிறார். அனைத்து இடங்களிலும் அவர் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. தொலைக்காட்சி சேனல்களில் யாரும் இலவசமாக தோன்றிவிட முடியாது. அவ்வாறு இருந்திருந்தால் அனைவரும் தோன்றுவார்கள். சேனல்களில் தோன்ற கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் வழங்க வேண்டும். அவ்வகையில் பிரதமர் மோடியின் விளம்பரங்கள் அனைத்தும் அவரிடம் கோடிக்கணக்கில் பணம்பெறும் தொழிலதிபர்களால் ஏற்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்