தொழிற்சாலைகளைக் காட்டிலும் மக்கள் நலன்தான் முக்கியம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளார்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்”(நிலக்கரி) இறக்குமதி செய்யவும், அதை பயன்படுத்தவும் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், எந்தவிதமான ஆய்வும் நடத்தாமல் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

திங்கள்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் பெட்கோக் பயன்படுத்த அனுமதி கொடுப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறீர்கள். எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தாமல், பெட்கோக் பயன்படுத்துவதால், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராயாமல் எப்படி அனுமதி அளித்தீர்கள்? காற்று மாசுபாட்டால் நகரங்களில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

60 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

நாளேடுகளில் வந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் இதற்கு முன்பாக அளித்த அறிக்கையிலும் காற்று மாசுபாட்டால் மக்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளீர்கள்” எனத் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதனால் ஏற்படும் பதிப்புகளை ஆய்வு செய்தார்களா? என்றும் நீதிபதிகள் கேட்டனர். நீங்கள் பெட் கோக்கை அனுமதிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இதற்கு முன்பும் ஆய்வு நடத்துவதற்கு முன்னர் நாட்டில் பெட் கோக் இற்க்குமதியை நீங்கள் அனுமதித்திருக்கிறீர்களா? என்றும் வினவினர்

மத்திய அரசு சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஎன்எஸ் நட்கர்னி பெட்கோக் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் ஆர்வமாக இருந்தது என்பது தவறான தகவல். பெட்கோக் பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளோம். அதற்குச் 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

உங்களுக்கு எது முக்கியம் மக்களின் உயிரா ? அல்லது தொழிற்சாலையா என்று நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர்

மேலும் நீதிபதிகள் எங்களுக்குத் தொழிற்சாலைகள் முக்கியமல்ல, மக்களின் நலன்தான் முக்கியம். இதைத் தெளிவாக உங்களிடம் தெரிவிக்கிறோம்” எனக் கூறி வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பெட் கோக்கை தடை செய்வது குறித்த நிலைபாடை 6 வார காலத்துக்குள் முடிவு செய்து விடுவோம் என்று மத்திய அரசு சார்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here