போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்தப் போராட்டம் எட்டவாது நாளாக தொடர்கிறது.

bus

இதனிடையே வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கில், போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருவதால், மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்ததோடு, போக்குவரத்து தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்தத் தொழிலாளியையும் பணிநீக்கம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

pro

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை புதன்கிழமையன்று (நேற்று) நடைபெற்றது. அப்போது, 2.44 மடங்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து விட்டு, அரசு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களது நிபந்தனையை அரசு ஏற்க மறுத்தால், நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்கத் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு (இன்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை செயலாளர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வேலை நிறுத்தக் காலத்திற்கான ஊதியம் வழங்கப்படாது என்றும், குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்படாது என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்