ஹரியானாவில் , ரோத்தக் மாவட்டத்தில் இருக்கும் டிடோலி கிராமத்தில் முஸ்லிம்கள் இந்துப் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் பொது இடங்களில் தொழுகை நடத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில் இருக்கும் முஸ்லிம்கள் தலையில் தொப்பி அணிவதையும், நீளமாக தாடி வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று பஞ்சாயத்து முன்னிலையில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தீர்மானம் நிறைவேற்றும்போது அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே இங்கு வசித்து வருகின்றனர் என்றும் நாங்கள் எப்போதுமே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம் என்றும் சில முஸ்லிம்கள் இந்து பெயர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் சுரேஷ் என்பவர் தி டிரிபியூன் – டம் தெரிவித்துள்ளார்.

இடுகாட்டை கிராமத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது என்ற முடிவு பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டது அதற்கு பதிலாக அவர்களுக்கு வேறு நிலம் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதே கிராமத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி கன்றுக்குட்டி ஒன்று இறந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து யாமீன், ஷாகீன் ஆகிய இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த கன்றுக்குட்டியை இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் வேண்டுமென்றே கொன்றதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஆனால், அந்த கன்றுக்குட்டியை தாங்கள் கொல்லவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரது மனைவி, குழந்தைகள், சகோதரர் ஆகியோர் இதுவரை கிராமத்திற்கு திரும்பவில்லை. மற்றொவரது வீடு இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.

அச்சமயத்தில் நிலவிய பதற்றம் நிறைந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கு அதிகளவிலான காவல்துறையினர் கிராமம் முழுவதும் குவிக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது .

சில கிராமவாசிகள் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே பதற்றம் நிலவவில்லை என்று கூறினாலும் அவ்வாறு நடந்திருந்தால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் பஞ்சாயத்து தலைவரிடம் இது குறித்து பேசுவேன் என்றும் பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ரோத்தக்கின் துணை மாஜிஸ்டிரேட் தி ஹிந்து நாளிதழிடம் கூறியுள்ளார்.

துணை ஆணையர் யாஷ் கார்க் எந்தவிதமான பதட்டமும் கிராமத்தில் இல்லை என்று கூறியவர் அவ்வாறு நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தி டிரிபியூன் – டம் தெரிவித்துள்ளார்.

Courtesy : Scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here